பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதுகின்றனர்.
மாணவிகள் 4 லட்சத்து 81,371 பேர்; மாணவர்கள் 4 லட்சத்து 83,120 பேர் ஆவர். தனித்தேர்வர்களாக 11,098 பெண்களும், 25,546 ஆண்களும், 5 திருநங்கைகளும் பங்கேற்கின்றனர்.
3,609 தேர்வு மையங்கள்... சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வு மையங்களில் மொத்தம் 50,756 மாணவ, மாணவிகளும், புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வு மையங்களில் 17,514 பேரும் தேர்வெழுதவுள்ளனர். வேலூர், கடலூர், சேலம், மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, புழல் சிறைகளில் உள்ள 186 சிறைவாசிகள் தேர்வு எழுதுவதற்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய மையங்கள் 237.
செல்லிடப்பேசிக்குத் தடை: அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக் குழுவில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக 6,900 பறக்கும் படையினர் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்லிடப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகளைத் தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத்தேர்வு இயக்ககத்தில் முழு நேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காலங்களில் 93854 94105, 93854 94115, 93854 94120, 93454 94125 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.