வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனுக்கு பொதுமக்கள் தங்கள் பெயரை அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
விண்வெளி ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், இன்னும் சில மாதங்களில் பார்க்கர் சோலார் எனும் செயற்கைக்கோளை அது ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.
இதுவரை எந்த செயற்கைக்கோளும் செல்லாத அளவிற்கு இந்த பார்க்கர் சூரியனை நெருங்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து 40 லட்சம் மைல் தூரம் வரை செல்லும் இந்த செயற்கைக்கோளானது, அங்கிருந்தபடி ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
அதன்மூலம், சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல விசயங்கள் தெரிய வரலாம் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த செயற்கைக்கோளில் ஒரு மெமரி கார்டு இணைத்து அனுப்பப்படுகிறது. அதில், பூமியில் இருப்பவர்களின் பெயரை பதிவு செய்து அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றையும் நாசா வெளியிட்டுள்ளது.
அதில், சூரியனுக்கு தங்கள் பெயரை அனுப்ப விரும்பும் பொதுமக்கள் http://go.nasa.gov/HotTicket என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 27ம் தேதி கடைசித் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு விஐபி பாஸ் ஒன்றையும் நாசா வழங்குகிறது.