"சிட்டுக்குருவி எப்படி சுத்தித் திரிஞ்சுது... இப்போ சுத்தமா இல்லாம போயிருச்சே"
"இந்த செல்போன் டவர் வந்துதான் சிட்டுக்குருவிகளை அழிச்சுருச்சு"
போன்ற பேச்சுகளை பல இடங்களில் நாம் கேட்கலாம். ஆனால், அவை உண்மையில் அழியும் தருவாயில் உள்ள ஒன்றா? அதன் வாழ்வுக்கு எதிரியாகக் காட்டப்படும் கருத்து அறிவியல் பூர்வமானதா? எத்தனையோ பறவைகள் அழியும் நிலையிலிருக்க, 'சிட்டுக்குருவி தினம்' மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம்?
கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள், தேவையற்ற செய்திப் பரவல்களால் மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ விடுகின்றன. அதுபோலத் தான் இதுவும். இந்தியாவில் மக்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட வெண்வயிற்று நாரைகள் இன்று 250க்கும் குறைவாகவே எஞ்சியுள்ளன. வங்காள வரகுக்கோழி வெறும் 280 மட்டுமே. வானில் கூட்டம் கூட்டமாக வட்டமிட்ட மஞ்சள் திருடிப் பாறு ( Egyptian vulture) ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வளவு ஏன் சிட்டுக்குருவிகளைப் போலவே 1990கள் வரையிலும் மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்து வந்த 'மஞ்சள் தொண்டை சின்னான்' இன்று காண்பதே அரிது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
பெங்களூரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராஜசேகர், வெங்கடேசா ஆகிய இருவரும் நடத்திய ஆய்வின் படி உணவு அதிகம் கிடைத்த இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன. உத்திரப்பிரதேச வயல்வெளிகளில் ஆராய்ச்சியாளர் கோபி சுந்தர் நடத்திய கணக்கெடுப்பின் படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 164 சிட்டுக்குருவிகள் வரை இருந்துள்ளன, அப்படியெனில் அந்த மாநிலத்தில் மட்டுமே லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. தில்லியில் திரு. நீரஜ் கேரா அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த நகரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருப்பது தெரியவந்தது.
சிட்டுக்குருவி தினத்தின் பின்னணி பாதிப்புகள் என்ன?
மக்களுக்குச் சூழல் மற்றும் பறவைகள் பற்றிய புரிதல் வருவது நல்லதுதானே என்று பலர் கேட்கலாம். இன்று வரையிலும் ஆராயப்படாமலும் கவனிக்கப்படாமலும் அதிக அளவிலான உயிர்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. அவை பற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்குச் சரியாகச் சென்றடையவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சிக்கோ, பாதுகாப்பிற்கோ அரசும் உரிய நிதியை ஒதுக்குவதில்லை. ஆனால் சிட்டுக்குருவிகள் மீதான அக்கறையை எடுத்துச் செல்வதன் மூலம் மேம்போக்காக உயிர்களுக்கு முக்கியத்துவம் தருவதுபோல் காட்டிக்கொள்கின்றன. அது மட்டுமின்றி இந்தியப் பறவைகள் உலகளவில் விலங்குகளுக்கான கள்ளச்சந்தைகளில் அதிகம் கடத்தி விற்கப்படுகின்றன. அதற்கு வடஇந்தியாவில் மட்டுமே 20 சந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒரு சந்தைக்கு சுமார் 2000 பறவைகள் ஒரு சீசனுக்கு விற்பனையாவதாகவும், மொத்த சந்தைகளிலும் சீசனுக்கு சுமார் 40,000 அரிய வகைப் பறவைகள் விற்கப்படுவதாகவும் பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் முன்னால் டைரக்டர் திரு. ஆசாத் ரஹ்மானி கூறியுள்ளார். சிட்டுக்குருவிகளும் கடத்தப்படுவது உண்மைதான், ஆனால் ஆயிரங்களில் விற்கப்படும் பறவையை முன்னிறுத்திவிட்டுப் பின்னால் லட்சங்களில் விற்கப்படும் பறவைகளை கள்ளச்சந்தைகளில் கடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி சிட்டுக்குருவிகள் கிடைப்பதே அரிதாக இருக்கும் அளவிற்கு ஆபத்தான நிலையில் ஒன்றும் இல்லையே, நகர்ப்புறங்களுக்கு வெளியே சென்றால் இன்றளவும் பலவற்றைப் பிடிக்கலாம். ஆகையால் அதை முன்னிறுத்துவது பெரிய இழப்புகளைக் கள்ளச்சந்தைகளில் ஏற்படுத்தாது. மாறாக மற்ற பறவைகளை இந்தப் போர்வைக்குப் பின்னால் கடத்துவதற்கு வசதியாக இருக்கும்.
சிட்டுக்குருவிகள் மீதான இந்த அதீத அக்கறை, மக்களின் கண்களில் இருந்து இந்தக் கொள்ளைகளை மறைப்பதற்காகவும், சூழலுக்கு நல்லது செய்வதுபோல் காட்டிக் கொள்வதற்காகவும் முன்வைக்கப்பட்ட ஒரு ஆயுதமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
ஓர் இடத்தில் அந்தப் பறவை இல்லையென்றால் அங்கே அதன் வாழ்விடம் அழிக்கப்பட்டு அது அழிந்துவிட்டதாகத் தானே அர்த்தம். அப்படியிருக்க அதற்கு முக்கியத்துவம் தருவதில் என்ன தவறு?
முக்கியத்துவம் தருவதில் தவறேதுமில்லை. சொல்லப்போனால் சிட்டுக்களும் அழிந்துகொண்டு தான் வருகின்றன அவற்றுக்கு முக்கியத்துவம் தேவைதான். ஆனால் அதீத முக்கியத்துவம், அதைவிட ஆபத்தான நிலையில் இருப்பவற்றுக்குத் தேவைப்படும் முக்கியத்துவத்தை மறைத்துவிடுகிறது என்பதே நிதர்சனம். உதாரணமாக திருச்சி, சென்னை போன்ற பகுதிகளில் மயில் அதிகம் காணப்படாத காரணத்தால் அது அழிந்து வருகிறது என்று கூறினால், திருப்பூர், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதன் அதிக எண்ணிக்கை விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒரு பகுதியில் இல்லை என்பதால் அது அழிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. அதைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வு முழுமையாக நடத்தப்பட வேண்டும். உதாரணமாக சென்னையிலேயே 1975-க்கு மேல் சிட்டுக்குருவிகள் அதிகளவில் இருந்ததாகப் பதிவுகள் இல்லை, அப்படியிருக்க அது சென்னையில் குறைந்துவிட்டது என்று கூறுவது தெளிவின்மையையே காட்டுகிறது. சென்னையில் அதன் எண்ணிக்கை அப்போதிருந்தே குறைவாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கான வாழ்விடத்தை நகர்ப்புற சென்னையில் சுத்தமாக இல்லாமல் செய்துவிட்டதால் அதை இங்கே பார்க்க முடிவதில்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 40 பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக பதிவுகள் இருக்கிறது. அதுபோக மற்ற இடங்களில் ஆங்காங்கே அதற்கான உணவு மற்றும் வாழ்விடம் இருக்கும் பகுதிகளில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இன்றும் கொங்கு பகுதிகளில் சிட்டுக்குருவியை சமைத்து விற்கிறார்கள். ஒரு குருவியின் விலை 500 ரூபாய்க்குள்தான்.


செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிவது உண்மையா?
செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் சிங்கப்பூர், பாரிஸ், பெர்லின் போன்ற பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிகிறது. "ஒருவேளை டவர்களின் கதிர்வீச்சைத் தாங்கிக்கொண்டு வாழ்வதற்கு ஏற்ப அது தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்று ஒரு கேள்வி எழுகிறது. டவர்கள் அதிகமாகப் புழக்கத்திற்கு வந்ததே 1990-களின் இறுதியில்தான் என்பதால், குறுகிய காலத்தில் குருவிகள் இந்தக் கதிர்வீச்சுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்திருக்க வாய்ப்பில்லை. ஓர் உயிரினம் தன்னை மாறிவரும் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ள நீண்டகாலம் தேவைப்படும். அதற்குள் அது தனது எண்ணிக்கையில் பாதியைப் பலிகொடுத்துவிடும். ஆனால் செல்போன் கோபுரங்களால் அவற்றுக்குப் பாதிப்புகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
ஆபத்தில் இல்லாத ஓர் உயிரினம் மீது செலுத்தப்படும் கவனம், அக்கறை தேவைப்படும் உயிர்களைப் பின்னுக்குத்தள்ளிவிடும். அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் நீண்ட கால உழைப்பால் அவர்கள் நிரூபித்த விஷயங்கள், அவர்கள் அவற்றைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அர்த்தமற்றதாகிவிடும்