இன்று கூகுள் டூடுல் சித்திரத்தை கவனித்தீர்களா? ஒரு மரத்தைச் சுற்றி நான்கு பெண்கள் அரண் போல கைகோத்து நின்றுகொண்டிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கோபேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்த 'சாண்டி பிரசாத்', மலைவாழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், காடுகளை அழிவில் இருந்து காக்கவும் 1973-ல் சிப்கோ இயக்கத்தை தொடங்கினார். கிராம மக்களுக்குக் காட்டை மையமாகக் கொண்ட தொழில்களை உருவாக்கி கற்றுக் கொடுத்தார். காட்டைச் சுரண்டும் நடவடிக்கைகளைத் தடுத்தார். எங்களை வெட்டி சாய்த்துவிட்டு மரங்களை வெட்டுங்கள் என்று மக்கள் முழங்கினர். முக்கியமாக காட்டில் விறகு சேகரிக்கும் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சிப்கோ இயக்கம் சாண்டி பிரசாத்தால் தொடங்கப்பட்டது என்றாலும், மரங்களுக்காக உயிரை மாய்த்த அம்ரிதா தேவிதான் இதற்கு வித்திட்டவர். 18-ம் நூற்றாண்டில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங், என்பவர் 'மார்வார்' என்ற வனப்பகுதியில் புதிதாக ஓர் அரண்மனை அமைக்க ஆசைப்பட்டார். இதையடுத்து, அந்த வனப்பகுதியில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்க்க ஆட்களை அனுப்பினார். ஆனால், அங்கு வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' இன மக்கள் மரங்களை வெட்ட அனுமதிக்கவில்லை. மன்னர் அனுப்பிய ஆட்கள் மரங்களை வெட்டாமல் அங்கிருந்து நகர மாட்டோம் என்றனர். இனி பேசிப் பயனில்லை என்று நினைத்த பிஷ்ணோய் மக்கள், தங்கள் குழந்தைகளுடன் மரங்களைக் கட்டிப்பிடித்து நின்றனர். முதலில் எங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு மரங்களை வெட்டுங்கள் என்றனர். மன்னர் அனுப்பிய ஆட்கள் வேறு வழியின்றி அம்ரிதா தேவியையும் அவரின் மூன்று குழந்தைகளையும் முதலில் வெட்டிக் கொன்றார்கள். பின்னர் 363 மரங்களையும் அதைக் கட்டிப் பிடித்த கிராம மக்களையும் வெட்டிச் சாய்த்தனர்.


மரங்களுக்காக குடும்பத்துடன் உயிர் நீத்த அம்ரிதா தேவிதான் இந்தியளவில் மரங்கள் அழிப்பை தடுக்கும் போராட்டத்துக்கு வித்திட்டவர். அம்ரிதா தேவிதான் சிப்கோ இயக்கத்தின் முன்னோடி. 'சிப்கோ' என்றால் இந்தியில் அணைத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். சிப்கோ இயக்கத்தின் 45-வது ஆண்டு நிறைவை நினைவுப்படுத்தும் விதமாக இன்றைய கூகுள் டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது