உ ங்கள் வயது என்ன? தெரியும். உங்கள் நண்பரின் வயது? தெரியும். இந்தியாவின் வயது? தெரியும். நம் பூமியின் வயது? (கூகுள் பண்ணி பார்த்துவிட்டு) தெரியுமே! சூரியனின் வயது? (மீண்டும் கூகுள்) தெரியும்! சரி, நம் ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தின் வயது? மீண்டும் தேடி, ஆராய்ந்து விடை கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை எப்படி கணக்கு வைக்கிறார்கள்?
வருடா வருடம் நீங்கள் 'ஹேப்பி பர்த்டே' கொண்டாடுவீர்கள். நீங்கள் பிறந்த அதே தேதி மீண்டும் 365 நாட்கள் கழித்து வரும்போது ஒரு வயது ஆகிவிட்டது என்று கொண்டாடுகிறோம். அதே 'ஹேப்பி பர்த்டே'வயே பூமிக்கு என்றால் ஆங்கில காலண்டர் படி, ஜனவரி ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம். சூரியனை ஒரு முழு சுற்று சுற்றி முடிப்பதால் அது பூமியின் வயது என்று தோராயமாக எடுத்துக் கொள்ளலாம்.. அப்போ, சூரியக் குடும்பத்துக்கு? நம் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கின்

றன. சூரியன் நமது, தனது குடும்பத்தோடு சேர்த்து நமது பால்வெளியை சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஒரு நிமிஷம் தலை சுற்றுகிறதோ?
நேராக விஷயத்திற்குப் போவோம். ஒவ்வொரு கேலக்ஸியிலும் (galaxy) நடுவில் ஒரு பெரிய கருந்துளை (Blackhole) இருக்கும். அது கேலக்டிக் சென்டர் (galactic centre) என்று அழைக்கப்படுகிறது. நாம் சூரியனை சுற்றுகிறோம் என்றால், நம் சூரியன் இந்த சென்டரைதான் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆம், சூரியன் ஒன்றும் நம் அண்டத்தின் மையம் அல்ல. சூரியன் இப்படிச் சுற்றுவதால், இந்த கேலக்டிக் சென்டரை மையமாகக் கொண்டு நம் மொத்த சூரிய குடும்பமும் பால்வெளியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு சுற்று முடிவதைத் தான் ஒரு கேலக்டிக் இயர் (Galactic year) அல்லது காஸ்மிக இயர் (Cosmic year) என்கிறோம்.

ஒரு கேலக்டிக் வருடம் என்பது எவ்வளவு காலம்?
சூரியக் குடும்பம் இந்தப் பால்வீதியை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றி முடிக்க 225 மில்லியன் வருடங்கள் முதல் 250 மில்லியன் வருடங்கள் வரை ஆகும். இதுதான் ஒரு கேலக்டிக் வருடம். மணிக்கு 8,26,000 கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் அது சுற்றி வந்து கொண

்டு இருக்கிறது. ஒவ்வொரு 633.7 பூமி நாட்களுக்குத் தனது பயணப் பாதையில் ஒரு 'சென்ட்டி ஆர்க் செகண்ட்' (Centiarc second) நகர்ந்து கொண்டிருக்கிறது சூரியக்குடும்பம். இதுவரை சூரியன் தோன்றியதில் இருந்து இருபது சுற்றுகள்தான் சுற்றியிருக்கிறது. இதன்படி பார்த்தால் நம் சூரியக் குடும்பம் தோன்றி 20 கேலக்டிக் வருடங்கள் ஆகின்றன.
பூமியில் இதுவரை ஐந்து அழிவுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் பேரழிவாக கருதப்படுவது பெர்மியன் - ட்ரியாஸிக் எக்ஸ்டிங்ஷன் (Permian - Triassic Exctinction). இந்தப் பேரழிவில்தான் பூமியில் வாழ்ந்த 90 சதவிகித கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் 70 சதவிகித நில வாழ் உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அப்போதுதான் பெர்மியன் காலகட்டம் முடிந்து ட்ரியாஸிக் காலகட்டம் தொடங்கியது என்றும், இந்தப் பேரழிவில் இருந்துதான் பாலுட்டிகளே பிறந்தன என்பது வரலாறு. இப்போது எதற்கு இந்தத் தகவல்? அந்தப் பேரழிவு நடந்த சமயத்தில் சூரியக்குடும்பம் இந்தப் பால்வீதியில் எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில்தான் இப்போது இருக்கிறது. அதாவது நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் தான் ஒரு 'கேலக்டிக் வருடம்' முடிவடைந்துள்ளது.

மற்றொரு கொசுறு தகவல். நீங்கள் ஓர் இடத்தில் எந்த வேலையும் செய்யாமல் சும்மா நிற்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், நீங்கள் வேலை செய்யாமல் ஒன்றும் நிற்கவில்லை மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சூரியனையும், மணிக்கு 5,14,000 மைல் வேகத்தில் கேலக்ஸியையும் சுற்றி வந்து கொண்டிருக்கிறீர்கள். இனி யாரேனும் "சும்மாதான் இருக்க?" என்று கேட்டால், என்ன சொல்ல வேண்டும் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.