விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் திடீரென தகவல் துண்டிப்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி - எஃப்8 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
2 ஆயிரம் கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளானது 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.
எளிதில் அணுக முடியாத கிராமப்புறப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளின் தகவல்தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஏற்கெனவே, செயல்பாட்டில் இருக்கும் ஜிசாட் - 6 செயற்கைக்கோளுடன் இணைந்து, மேம்பட்ட தகவல்தொடர்புக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இஸ்ரோவின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பொறுப்பேற்றதும், செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற சிறப்பையும் இது பெற்றிருந்ததது.
தகவல் துண்டிப்பு: இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோளானது இரண்டாவது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையான இறுதியான மூன்றாவது நிலை சுற்றுவட்டப்பாதையில் ஏப்.1-ஆம் தேதி நிலை நிறுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செயற்கைக்கோளிடம் இருந்து எந்தவித சமிக்ஞையும் வராததால், அதனிடம் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து செயற்கைக்கோள் குறித்த பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
பாதிப்பு: மின்சக்தி அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதையும் இஸ்ரோ தெரிவிக்கவில்லை.
அதேசமயம், ஜிசாட் -6ஏ செயற்கைக்கோளுடனான தகவல் தொடர்பை மீட்டெடுக்கும் பணிகள் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது.
இஸ்ரோ ஆராய்ச்சி மையமானது பொதுவாக செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுவதை மட்டுமே அதன் இணையதளத்தில் அறிவிக்கும். ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோளானது முதல் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது குறித்து மார்ச் 30-ஆம் தேதி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.