''இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயல்வழி கற்றல்மூலம்அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வதுகுறித்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இவை உதவும் என்றார்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, "ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டுஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும்.

வர இருக்கிறபுதிய பாடத்திட்டம், 12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் தரமான பாடத்திட்டமாக அமையும். இந்த ஆண்டு, தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும்,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி, நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற வழிவகை செய்துள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது, "முறைகேடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.