முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான மாநில அளவிலான (டான்செட்) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23 -ஆம் தேதி (ஏப்.23) கடைசி நாள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் பட்டதாரி நுண்ணறி தேர்வு (கேட்) அல்லது மாநில அளவில் நடத்தப்படும் 'டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் 'கேட்' தேர்வு ஏதாவது ஒரு ஐஐடி சார்பிலும், 'டான்செட்' தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது. 2018 -ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வு எப்போது?: இதில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான டான்செட் தேர்வு மே மாதம் 19 -ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 20 -ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய ஏப்ரல் 23 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.