.

டெல்லி வியந்த அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா!டெல்லியில் தேசிய அளவில் நடந்த கருத்தரங்கில் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியா முன்வைத்த அசத்தலான யோசனைகள், அரசுக்கான பரிந்துரைகளாக மாறியிருக்கிறது.டெல்லியில் தேசிய அளவில்  கல்வியாளர்கள், கல்வி உயரதிகாரிகள் கலந்துகொண்ட கருத்தரங்கில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அசத்தலான யோசனைகளை முன்வைத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா.டெல்லி கருத்தரங்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் யோகப்பிரியாதிருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், தேவர்கண்டநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா, 'அரசுப் பள்ளிகள் எந்த மூலையில் இருந்தாலும் நமக்கான வழிகளைத் தேர்ந்தெடுத்து ஸ்பான்ஸர்கள் மூலமே பள்ளியையும் மாணவர்களையும் மேம்படுத்த முடியும்' என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.டெல்லியில் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய இரு நாள்களில் 'அரசு பள்ளிகளை அடையாளப்படுத்துதல்' (Branding of Government schools) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கின் நோக்கங்கள்:அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துதல்; தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்; நிதி ஒதுக்கீடு மேம்பாடு; ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்துதல்; பள்ளிகளையும் சமூகத்தையும் ஒருங்கிணைத்தல்; பள்ளிகளையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்தல் மற்றும் பள்ளிகளுடன் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல்.நாடு முழுவதிலும் உள்ள மத்திய - மாநிலக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் கல்வி பணியாற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து 74 கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த 29 கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்க அழைக்கப்பட்டன.இவற்றில் அதிகாரிகளையும் கல்வியாளர்களையும் வெகுவாக கவனம் ஈர்த்த கட்டுரைகளில் ஒன்றுதான், தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டு சமர்ப்பித்த இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியாவின் கட்டுரை.ஆசிரியர்கள், நிதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மட்டும் சார்ந்திருக்காமல், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முன்முயற்சிகள் குறித்து விரிவாக அந்தக் கட்டுரையில் அலசியிருந்தார் ஆசிரியர் யோகப்பிரியா. இவர் முன்வைத்த யோசனைகள் அனைத்துமே தன் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆதாரபூர்வமாகக் காட்டப்பட்டது என்பதால் கூடுதல் கவனம் கிடைத்தது.டெல்லி கருத்தரங்குதனது கட்டுரை மற்றும் முன்முயற்சிகள் குறித்து ஆசிரியர் யோகப்பிரியா கூறும்போது,"அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, நிதிநிலை, ஆசிரியர்கள் குறைவு போன்றவற்றை முன்னேற்ற அரசை மட்டும் சார்ந்து இருக்காமல் நாம் (ஆசிரியர்கள்)என்னென்ன முன்னெடுப்புகளை செய்யலாம் என்பதை ஏற்கனவே நாங்கள் எங்களுடைய பள்ளியில் பிறரது உதவியுடன் என்னென்ன மாற்றங்களை செய்தோம் என்பதை விளக்கினேன்."சமூக வலைதளங்களின் மூலம் பிற ஆசிரியர்கள் உள்கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்துள்ளனர் என்பதையும், சி.எஸ்.ஆர். (CSR) மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போன்ற திட்டங்களை அரசின் அனுமதியுடன் நாம் எவ்வாறு பள்ளிகளில் ஏற்படுத்தலாம் என்பதை விவரித்தேன். இந்த அனைத்து முயற்சிகளையும் பற்றி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்" என்றார்.ஆசிரியர் யோகப்பிரியா சுட்டிக்காட்டிய முன்முயற்சிகளான சி.எஸ்.ஆர். மற்றும்இதர நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பள்ளியை மேம்படுத்துவது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கம் அமைப்பது, மாணவர்களின் திறமைகளை செய்திதாள், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள்,சமூக வலைதளங்கள் போன்றவற்றில் பகிர்தல் முதலான கருத்துகளை கருத்தரங்கின் நிறைவில் அரசுக்கு வழங்கப்படும் பரிந்துரைகளில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.தேசிய அளவிலான இந்த முக்கியக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒரே இடைநிலை ஆசிரியர் யோகப்பிரியா மட்டுமே. இவரது பரிந்துரைகளுக்கு கருத்தரங்கிலேயே பாராட்டுகள் குவிந்தன.தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர்,"எஸ்.சி.இ.ஆர்.டி., என்.சி.இ.ஆர்.டி, ஜே.என்.யூ போன்ற மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கில் ஓர் இடைநிலை ஆசிரியராக பங்கேற்றதே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. எனது பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விவரித்தபோது பலரும் தனிப்பட்ட முறையிலும் பாராட்டினர். கர்நாடகாவில் இருந்து வந்திருந்த இணை இயக்குநர் ஒருவர் என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து ஆலோசனைகள் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது மறக்க முடியாதது. என்.சி.இ.ஆர்.டி.க்காக பணிபுரிந்த கோயல் எனும் பேராசிரியர் சாக்லெட் தந்து பாராட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது.கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருமே கருத்துகளை மட்டுமே முன்வைத்தனர். நானோ என் பள்ளியில் செய்து காட்டியதை எடுத்துச் சொன்னேன். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை அவர்கள் கண்முன் காட்டினேன். தமிழகத்தில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகளையும் முன்னுதாரணமாகச் சொன்னேன்.இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு நம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் நம்மிடம் இருக்கிறது. தமிழக அரசாணையே இதற்காகப் போடப்பட்டுள்ளது. ஆனால், இது பெரும்பாலான ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியாது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினேன்."எனது யோசனைகள் பலவும் அரசுக்குப் பரிந்துரைகளாகச் செல்வதில் மகிழ்ச்சி. இது என் பள்ளிக்கும், என் சக ஆசிரியர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறேன்," என்று நெகிழ்கிறார் ஆசிரியர் யோகப்பிரியா.பள்ளி மாணவர்களுக்கு உறுதுணைபுரிந்த கல்லூரி மாணவர்கள்அப்படி என்னதான் பள்ளிக்குச் செய்தார்?* உள்ளூர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை அணுகினார். பள்ளிக்கு ரூ.5,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தன.* உள்ளூரிலே பெரிய பாத்திரக் கடையை அணுகினார். பள்ளிக்கு ரூ.25,000 மதிப்பிலான டேபிள்களும் பெஞ்சுகளும் கிடைத்தன.* தான் பயின்ற மத்தியப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை மாணவர்களை அணுகினார். இவரது மாணவர்களுக்கு ஷூக்களும், சாக்ஸுகளும் கிடைத்தன. இவற்றின் மதிப்பு ரூ.20,000.* இவர் மட்டும் அல்ல; இவர் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் உள்பட  அனைத்து ஆசிரியர்களுமே உள்ளூரில் ஸ்பான்சர்களை நாடினர். இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.40,000 மதிப்பிலான விளையாட்டு சீருடை, உபகரணங்கள் கிடைத்தன.* பள்ளி மூலம் ஸ்பான்ஸர்களை அணுகியதன் விளைவாக மூன்று வகுப்பறைகளுக்கு டைல்ஸ் போடப்பட்டுள்ளது.* உள்ளூர் பிரமுகர் ஒருவரது ரூ.1 லட்சம் நன்கொடை மூலம் பள்ளியில் மேடை ஒன்று கட்டப்பட்டுள்ளது.* ஓ.என்.ஜி.சி.யை அணுகி ரூ.70,000 செலவில் போர்வெல் போட்டு தண்ணீர் வசதி நிறைவாகக் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.பள்ளியில்...இந்தப் பட்டியல் இன்னும் நீளும், தன் பள்ளியும் தனது வகுப்பறையும் தன்னிறைவுஅடையும் என்று கூறும் ஆசிரியர் யோகப்பிரியா,"எனது அடுத்த இலக்கு, என் பள்ளியில் மாணவர் சேர்க்கையைக் கூட்ட, பள்ளியில் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்; ஸ்மார்ட் க்ளாஸ்ரூம் அமைக்க வேண்டும்; ஆங்கிலத்தில் என் மாணவர்களை சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் செய்ய பயிற்சிகள் வழங்க வேண்டும்; தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் என் மாணவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்," என்றார் உத்வேகத்துடன்.மாணவர்களுடன் பள்ளியில் ஆசிரியர் யோகப்பிரியாசக ஆசிரியர் சமூகத்திடம் சில செய்திகளை முன்வைக்கும்போது,"சிறப்பாக செயல்படும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்களது புதிய புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். பல்வேறு விதமான போட்டிகளைப் பற்றி அறிந்து, அவற்றில் நம் மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்யவேண்டும். ஏற்கெனவே கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள், அத்தகவல்களை பிற ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டு வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு சமூக வலைதளங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும்," என்றார் ஆசிரியர்