'நீட்' நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளில் தரப்படுவதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சில இன்ஜினியரிங் கல்லுாரிகள் தேர்வுசெய்யப்பட்டு, அங்கு, மாணவ - மாணவியருக்கு, தங்குமிடம், உணவு வசதியுடன், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள, சத்யபாமா நிகர்நிலை பல்கலையில் நடக்கும் சிறப்பு பயிற்சி முகாமை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று பார்வையிட்டார்.

பல்கலை இணை வேந்தர், மரியஜீனா ஜான்சனை சந்தித்து, பயிற்சிக்கான வசதிகள் குறித்து பேசினார். மாணவ - மாணவியரை சந்தித்து, பயிற்சி விபரங்கள், தங்குமிடம், உணவு வசதிகள் குறித்து, கேட்டறிந்தார்.பின், அமைச்சர், நிருபர்களிடம் கூறுகையில், ''மொத்தம், ஒன்பது கல்லுாரிகளில், நீட் தேர்வுக்கு, உணவு, இருப்பிடத்துடன் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.''இதில், 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயிற்சி பெறுகின்றனர். மூன்று கல்லுாரிகளில், ஆங்கிலத்திலும், இரண்டு கல்லுாரிகளில், தமிழிலும் பயிற்சி தரப்படுகிறது,'' என்றார்.