சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். முழுமையாக ஒரு கல்வி ஆண்டில், ஒரே இடத்தில் பணியாற்றியோர், இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். ஆண்டுதோறும், மே மாத துவக்கத்தில் கவுன்சிலிங் துவங்கி, மாத இறுதியில் முடிக்கப்படும். புதியகல்வி ஆண்டில், வகுப்புகள் துவங்கும்போது, புதிய இடத்தில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வர்.இந்த ஆண்டு, தொடக்கப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆன்லைன் முறையில் வெளிப்படையான கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை விபரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில், தகவல்கள் தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, மே மாத இறுதிக்கு தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மே, 16 வரை விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. எனவே, விடைத்தாள் திருத்தம் முடிந்த பின், ஜூனில் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது.விடைத்தாள் திருத்த பணிகள் இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மே மாதம் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.