`உங்களை யாரும் விமர்சனம் செய்யாமல் இருக்க வேண்டுமா? எதையும் செய்யாதீர்கள்; எதையும் பேசாதீர்கள்; ஒன்றுமே செய்யாமல் இருங்கள்!' - கொஞ்சம் கடுமையாகவே சொல்லியிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் தத்துவவியலாளருமான எல்பர்ட் ஹப்பார்டு (Elbert Hubbard). நீங்கள் செய்கிற வேலையில் யாராவது குறை கண்டுபிடிக்கிறார்களா? அதற்காகக் கவலையேபடாதீர்கள். `நாம் வேலை செய்கிறோம்; செய்த வேலையில்தானே குறை சொல்கிறார்கள்' என்று திருப்திபட்டுக்கொள்ளுங்கள். அதற்காகத் திரும்பத் திரும்ப தப்பும் தவறுமாக ஒரு வேலையைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. தவறுகளைக் களையவும், ஒரு செயல் மேம்பட உதவுவதும்தான் விமர்சனம். ஒரு நேர்மையான விமர்சகர், தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார்; அவருடைய விமர்சனம் படைப்பாளியின் திறமையை அடையாளம் காட்டுவதாக இருக்கும்; படைப்பாளி தன் திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவதாக இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்வதற்குக்கூட ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. யாராவது நம்மை ஏதாவது சொல்லிவிட்டால் `நான் யார் தெரியுமா, என்னைப் போய் குறை சொல்லலாமா?' என்கிற ரேஞ்சுக்கு எகிறுகிறவர்களைப் பார்க்கிறோம். `நான் மட்டுமா தப்பு செய்யறேன்... மத்தவங்களும்தான் செய்றாங்க..' என்று அடுத்தவர் மேல் விரலை நீட்டுபவர்களும் இருக்கிறார்கள். நம்மை யாராவது விமர்சனம் செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தால் அதைக் களைய முன் வரவேண்டும். இது, இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே போவதற்கான வழி. இந்த யதார்த்தத்தை அடையாளம் காட்டுகிறது ஒரு மேதையின் வாழ்வில் நடந்த கதை.

அந்தச் சிறுவனுக்கு வயது ஐந்து. ஆனால், மேதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். பின்னே... அந்த வயதிலேயே அம்மா பாடுகிற அத்தனைப் பாடல்களையும் தன் கையிலிருக்கும் வயலினில் அட்சரம் பிசகாமல் அப்படியே இசைத்துவிடுகிறானே! அவனின் வயலின் இசையைக் கேட்டவர்களெல்லாம் மெய்மறந்து போனார்கள். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... 19-ம் நூற்றாண்டில் வயலின் இசையில் தனி முத்திரை பதித்த உலே புல் (Ole Bull). நார்வேயின் மேற்குக் கடற்கரை நகரமான பெர்ஜெனில் (Bergen) பிறந்தவர் உலே புல். ஒன்பது வயதிலேயே உள்ளூர் ஆர்கெஸ்ட்ரா ஒன்றில் சேர்ந்து முதல் மேடை ஏறிவிட்டார். தந்தைக்கு, உலே புல்லை எப்படியாவது ஓர் அரசாங்க அதிகாரியாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. அவருக்கு 18 வயது ஆனபோது நார்வேயிலிருந்த பழம்பெருமை வாய்ந்த கிறிஸ்டியானியா பல்கலைக்கழகத்தில் (University of Christiania) சேர்த்துவிட்டார். ஆனால், அவருக்குப் படிப்பில் நாட்டமில்லை. மனம் முழுக்க இசைதான் நிரம்பியிருந்தது. தேர்வில் தோற்றுப் போனார். அப்பாவை எதிர்த்துக்கொண்டு, ஓர் இசைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தார்.
ஐரோப்பாவில் இந்த வகை இசைப் பள்ளிகளை `Musical Lyceum' என்று சொல்வார்கள். உலே புல் வயலின் வாசிப்பதில் அசாத்தியத் திறமை வாய்ந்தவர். உண்மையில் அவருடைய கலைத் திறமைக்குத் தீனி போடுவதாக இசைப் பள்ளி அமையவில்லை. அங்கிருந்த ஆசிரியர்களைவிட இசையில் கில்லியாக இருந்தார் உலே புல். அவர் சேர்ந்திருந்த பள்ளியின் இயக்குநருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட, தகுதியான ஆள் வேறு யாரும் இல்லாததால், அந்தப் பொறுப்பு புல்லிடம் வந்தது. சிறு வயதிலேயே பெரிய பதவி. பொறுப்பு வந்ததும் தான் முழுமையடைந்துவிட்டதாகவே நினைத்துவிட்டார் புல். `இனிமேல் என்ன... வரிசையாக இசைக் கச்சேரிகளை (Concert) நிகழ்த்திவிட வேண்டியதுதான்' என்கிற முடிவுக்கும் வந்துவிட்டார். வரிசையாக இசை நிகழ்வுகளை நடத்த ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்துவிட்டார். உண்மையில், அந்த வயதில், பிரமாண்டமான வயலின் இசை நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு அவர் தயாராகியிருக்கவில்லை. வயலின் இசைப்பதில் தனித்துவம் இருந்தாலும், மேடையில் இசைத்து, பார்வையாளர்களை வசியப்படுத்தும் வித்தை அவருக்கு அப்போது கைவந்திருக்கவில்லை. அதாவது, அவர் போதுமான பயிற்சி பெற்றிருக்கவில்லை.
அந்த இசைப் பயணத்தில் அவர் இரண்டாவதாகச் சென்ற இடம் இத்தாலியிலிருக்கும் மிலன் (Milan) நகரம். ஓர் இளம் வயலின் கலைஞன்... நார்வேயிலிருந்து வந்திருக்கிறார்... என்னதான் வாசிக்கிறார் என்று பார்த்துவிடுவோமே... என விதவிதமான காரணங்களால் கூடியிருந்தது கூட்டம். உலே புல் மேடையில் ஏறினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்வு. கூட்டத்தில் எந்தச் சலசலப்பும் இல்லை. நிகழ்வின் முடிவில் லேசாகக் கரவொலி... அவ்வளவுதான். நிகழ்வு முடிந்தது.

அடுத்த நாள் மிலன் நகரிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்றில், உலே புல்லின் இசை நிகழ்வு குறித்த விமர்சனம் வெளியாகியிருந்தது. அதை எழுதியிருந்தவர் இத்தாலியிலேயே பிரபலமான விமர்சகர். அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... `உலே புல் முறையான பயிற்சி பெறாத இசைக்கலைஞர். அவர் வைரமாக இருக்கலாம்... இறுகிக் கல்லாகக் கிடக்கும், பட்டை தீட்டப்படாத வைரம்!'
இந்த விமர்சனத்தைப் படித்து ஆடிப்போய்விட்டார் உலே புல். இதற்கு இரண்டுவிதமாக எதிரிவினையாற்ற அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கோபப்படுவது; மற்றொன்று, கற்றுக்கொள்வது. நல்லவேளையாக இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார் புல். அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முகவரியை விசாரித்தார். ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்துகொண்டு அந்த அலுவலகத்துக்குப் போனார். ரிசப்ஷனில் அவர் தன் பெயரைச் சொன்ன சிறிது நேரத்துக்கெல்லாம் நேரே வந்துவிட்டார், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர். வரவேற்றார். ``என்ன விஷயம் சொல்லுங்க...'' என்று கேட்டார்.
``ஒண்ணுமில்லை. இன்னிக்கி உங்க பேப்பர்ல என் நிகழ்ச்சியைப் பத்தின விமர்சனம் வந்திருக்கு. அதை எழுதினவரைப் பார்க்கணும்...''
``அவரைப் பார்த்து... சண்டை எதுவும் போடப் போறீங்களா?''
``அதெல்லாம் இல்லை. சும்மா ரெண்டு வார்த்தை பேசணும். அவ்வளவுதான்...''
ஒரு கணம் பத்திரிகை ஆசிரியர், புல்லின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அதில் கடுகடு தன்மை, கோபம் எதுவும் தெரியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவராக, ``என்கூட வாங்க...'' என்று ஓர் அறைக்கு அழைத்துப் போனார்.

அந்தத் தனியறையில் உட்கார்ந்திருந்தார் அந்த விமர்சகர். பெரிய ஃப்ரேம் கண்ணாடி அணிந்துகொண்டு, நடுங்கும் விரல்களால் பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் அவர். வயது எப்படியும் 70-க்கு மேலிருக்கும். `இந்த முதியவரா என் நிகழ்வுக்கு விமர்சனம் எழுதியவர்?' ஆச்சர்யப்பட்டுப் போனார் புல். ஆசிரியர், ``நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்...'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அந்த விமர்சகரின் எதிரே அமர்ந்துவிட்டாலும், உலே புல்லுக்குப் பேச்சே வரவில்லை. `இந்த மனிதர், தன் வாழ்க்கையில், தன் அனுபவத்தில் என் நிகழ்வைப்போல எத்தனை பார்த்திருப்பார்... எவ்வளவு எழுதியிருப்பார்..?' நினைக்க நினைக்க அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது.
``என்ன... விமர்சனத்தைப் படிச்சுட்டு என்னைத் திட்டிட்டுப் போகலாம்னு வந்தீங்களா?''
``இல்லை சார்... நான் என்னென்ன தப்பு செஞ்சேன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, திருத்திக்கலாம்னு வந்தேன்.''
முதியவர் நெகிழ்ந்து போனார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உலே புல்லுக்குப் பாடம் எடுத்தார்.
தன் ஓட்டல் அறைக்குத் திரும்பிய உலே புல் முதல் வேளையாக அடுத்து நிகழ்த்தவிருந்த தன் அத்தனை நிகழ்ச்சிகளையும் கேன்சல் செய்தார். வீடு திரும்பினார். அடுத்த ஆறு மாதங்கள்... பல தேர்ந்த வயலின் ஆசிரியர்களைத் தேடிப் போய் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதுதான் அவருடைய வேலையாக இருந்தது. கற்றுக்கொண்டு வந்ததை மணிக்கணக்காக வீட்டில் உட்கார்ந்து பயிற்சி செய்தார். தன் தவறுகளைத் திருத்திக்கொண்டார். பல சூட்சுமங்கள் புரியப் புரிய இசை வாசிப்பில் கற்பனை பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு அவர் மேடையேறி, வயலின் இசையை நிகழ்த்தியபோது பரவசத்தில் திளைத்தார்கள் பார்வையாளர்கள். இசை நிகழ்வை நிகழ்த்த வரச் சொல்லி அக்கம் பக்க நாடுகளிலிருந்தெல்லாம் அழைப்புகள் குவிந்தன. ஐரோப்பாவில், அவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் திரண்டபோது உலே புல்லுக்கு வயது வெறும் 26.