புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9 வகுப்புகளுக்கான பாடநூல்களின் ஆன்லைன் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-
பள்ளிக் கல்வித் துறை அரசாணையின்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம் மூலம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து முதல் கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் தரமான முறையில் அச்சிடப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து 1, 6, 9, பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்குரிய விலையில்லா பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்களின் விற்பனை வியாழக்கிழமை முதல் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தின் இணையதளம் (www.textbookcorp.in) மூலம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடநூல்கள் ஜூன் இரண்டாவது வாரத்தில் விற்பனை தொடங்கப்படவுள்ளது. புதிய பாடத்திட்ட நூல்கள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9 வகுப்புகளுக்கான பாடநூல்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கும்.
மேலும் பிளஸ் 2 பாடநூல்கள் விற்பனைக்காக டிபிஐ வளாகத்தில் சிறப்பு கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.