பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 1 சதவீதம் குறைந்தது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:- பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் குறைவு ஆகும். சில பாடங்களில் கேள்விகள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சி மூலம் அறிய முடிந்தது.
நமது பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு சவால் விடுவதாக இருக்க வேண்டும். மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகள், மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதால் பொதுத்தேர்வில் வினாக்கள் கடினமாகக் கேட்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ப்ளுபிரிண்ட் முறை தவிர்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு மாணவர்களின் நலன் கருதியே இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் தோல்வியைத் தழுவியவர்கள் துவண்டு விடத் தேவையில்லை. ஜூன் 25-ஆம் தேதியே அவர்கள் உடனடியாகத் தேர்வு எழுதலாம்.
மாணவர்களை விளம்பரப்படுத்த வேண்டாம்: கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமும், இணையதளம் மூலமும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுத் தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை பெற்றோர் கடந்த ஆண்டு முதலே பாராட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஒவ்வொரு வகுப்புக்கான கல்விக் கட்டணத்தை பெயர் பலகையில் பட்டியலிட்டு வைக்க வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்ச்சி விகிதத்தில் முதல் மாணவர், 2-ஆம் மாணவர் என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இதையும் மீறி பள்ளிகள் விளம்பரப்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் பற்றாக்குறை ஏன்? வட மாவட்டங்களில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம் குறைவதாக பலர் ஆதங்கப்படுகின்றனர். பல ஆசிரியர்கள் சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றதால் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இந்த குறையை போக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர்களை இந்த அரசு நியமித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த குறை ஏற்படாது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வீதம் குறைவாக உள்ளது உண்மைதான். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செப்டம்பர் இறுதி வரை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் நடவடிக்கை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்காவிட்டால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:- ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், இங்கு மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்தால் ஆங்கில அறிவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் பொதுமக்களில் பலர் அங்கு செல்கின்றனர். அரசு இதை கவனமுடன் பரிசீலிக்கிறது. இதே தரத்தில் அரசு பள்ளிகளிலும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை மாணவர்களை மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். இவ்வாறு மாணவர்களை சேர்க்காத 12 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.