கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற இதுவரை 58,076 பேர் பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 25 சதவீத இடங்களில் சேரும் அனைத்துக் குழந்தைகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தி
விடும்.
அதன்படி 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்காக கடந்த ஏப்.20-ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் பெற்றோர் இணைய வழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோரிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 15 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 58,076 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சம்: அதிகபட்சமாக சென்னையில் 4,467; மதுரை 4,395; வேலூர் மாவட்டத்தில் 3,927 பெற்றோர் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரியில் 178; அரியலூர் மாவட்டத்தில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் 4,432 தனியார் பள்ளிகள் உள்ளன. அதில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். கடந்த ஆண்டு 91 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சேர்க்கை ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 23-இல் குலுக்கல் மூலம் சேர்க்கை: ஒரு பெற்றோர் தங்களது குழந்தைக்கு வசிப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்பதால் பெற்றோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். பல பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் மே 23-ஆம் தேதி அந்தந்தப் பகுதிகளுக்கு உள்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்பு குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.
நீலகிரி, அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அங்கு பெற்றப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..