தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?: பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ.ஆர். குறியீடு: ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ஐசிடி): மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 'டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இணையதள விவரங்கள்: பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

சொற்களஞ்சியம்: பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கார்ட்டூன் என்ற வார்த்தைக்கு நேராக கருத்துப்படம் என கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தின் இலக்கு: இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம், பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.

1,000 ஆசிரியர்கள்- 500 மொழிபெயர்ப்பாளர்கள்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு பகலாக பாடத் திட்ட உருவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதில் 200 பேராசிரியர்கள், 1,000 ஆசிரியர்கள், 500 மொழி பெயர்ப்பாளர்கள், 75 ஓவிய ஆசிரியர்கள், 5 வடிவமைப்பு நிறுவனங்கள் ஈடுபட்டன