நாடு முழுவதும் இன்று நீட் தேர்வை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களுக்காக 2 ஆயிரத்து 255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நீட் தேர்வை 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்காக மொத்தம் 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 170 தேர்வுக் கூடங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 49 மையங்களில் 33 ஆயிரத்து 842 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். கோவையில் 32 மையங்களில் 15 ஆயிரத்து 960 மாணவர்களும், மதுரையில் 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் 7 மையங்களில் 5 ஆயிரத்து 560 மாணவர்களும் சேலத்தில் 26 மையங்களில் 17 ஆயிரத்து 461 மாணவர்களும், திருச்சியில் 12 மையங்களில் 9 ஆயிரத்து 429 மாணவர்களும், நெல்லையில் 10 மையங்களில் 4 ஆயிரத்து 383 மாணவர்களும், வேலூரில் 14 மையங்களில் 9 ஆயிரத்து 54 மாணவர்களும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
மேலும் ராஜஸ்தான், புனே போன்ற இடங்களிலும் தமிழக மாணவர்களுக்கு நீட் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு முன்பாக நீண்ட தூரம் பயணப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று சேர்ந்தனர். இன்று தேர்வு எழுத உள்ள நிலையில், மொழி புரியாத வெளிமாநிலங்களில் தங்குமிடம், தேர்வு மையத்தை தேட வேண்டிய நிலையில் மாணவர்களும், உடன் சென்றோரும் தவித்தனர். பெரும்பாலான மாணவர்களுக்கு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தமிழர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு போன்றவற்றை வழங்கி, மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், தாமதமாகச் சென்ற ஒரு சிலருக்கு உதவிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன.