கோபிசெட்டிபாளையம்:''பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வெளிப்படை தன்மையோடுநடக்கிறது. எங்கெங்கு ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்ப அரசு நடவடிக்கைமேற்கொண்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கலிங்கியம், புதுவள்ளியாம்பாளையத்தில், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை சார்பில், சி.ஏ., எனப்படும், சார்ட்டர்டு அக்கவுண்ட் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, 16 மாவட்டங்களில், 500 பேர் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியின் மூலமாக, 20 ஆயிரம் மாணவர்களுக்கு, பிளஸ் 2 முடித்தவுடன், வேலைவாய்ப்பு கிடைக்கும்.கார்மென்ட்ஸ் ஏற்றுமதி தொழிலை மாணவர்கள் கற்று தெரிந்து கொள்ளவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் போன்ற, 12 பிரிவுகளில் தொழிற்கல்விகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தைகற்று, அதன் மூலம் எந்த பொதுத்தேர்வு வந்தாலும், அதை மாணவர்கள் சந்திக்கும் ஆற்றலை உருவாக்குவோம். மாதந்தோறும், பள்ளிகளில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.இம்மாத இறுதிக்குள், ஜெர்மன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து, 600 பயிற்சியாளர்கள் தமிழகம் வருகின்றனர்.இவர்கள் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, சரளமாக ஆங்கிலம் கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு வாரம், தமிழகத்திலேயே தங்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் வெளிப்படை தன்மையோடு நடக்கிறது. யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு, முறைப்படி கவுன்சிலிங் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்கெங்கு ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்யும்போது, எந்த மாவட்டத்தில் காலிப்பணியிடம் உள்ளதோ, அதை நிரப்பி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.