கல்வித் துறை அலுவலகங்களைப் பிரிக்கும்போது இத்துறையின் பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யக் கூடாது என தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான்முத்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் 32 முதன்மைக் கல்வி அலுவலகங்கள், 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 18 மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் அலுவலகங்கள், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம், 3 பள்ளிக்கல்வித் துறை தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நிர்வாகத்தை மேலும் சீர்படுத்த: பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தை மேலும் சீர்படுத்த அரசாணை எண் 101 மூலம் அனைத்து வகை பள்ளிகளையும் உள்ளடக்கிய 500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலகம் என்ற அடிப்படையில் கல்வி அலுவலகங்களைப் பிரிக்க ஆணையிட்டு, அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தற்போது நடைமுறைப்படுத்திட உள்ளனர்.
பணியாளர்களின் நலன் காக்க: கல்வித் துறை அலுவலகங்களைச் சீரமைக்கும்போது, பணியாளர்களின் மாறுதல் என்பது தவிர்க்க முடியாது. எனவே, வருவாய் மாவட்டத்துக்குள் பணியாளர்கள் மாறுதல் என்பது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியாளரின் விருப்பம், கலந்தாய்வின் மூலம் அவர்களை அலுவலகங்களுக்கு நியமனம் செய்தால், பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். மேலும், அலுவலகங்கள் வாரியாக பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது