தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் நலன் கருதி ரூ.49 கோடி செலவில் சுத்தமான குடிநீர் வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சட்டமன்றக்கூட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். பள்ளிகளின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருக்கும் நீரானது, ஆர்.ஓ. எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு ரூ.2 லட்சம் வீதம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, 48.96 கோடி ரூபாயில் சுத்திகரிப்புக் கருவிகள் பொருத்தப்படவுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சம் வீதம் 35.10 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதித் தொகையானது தொகுதியின் வரையறுக்கப்படாத நிதியின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக ஒதுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.