புதுக்கோட்டை,ஆக.30:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆசிரியர்கள் பற்றிய கண்ணியமற்ற பேச்சினைக் கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச்செயலாளர் மன்றம் சண்முகநாதன் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டத்தில்  ஆசிரியர்களை பற்றிய தரமற்ற,கீழ்த்தரமான பேச்சுகளை ஜாக்டோ ஜியோ வன்மையாக கண்டிக்கிறது.மேலும் அவர் வகிக்கும் முதல்வர் என்ற உன்னதமான பதவியின் மாண்பை பாதுகாக்க,தான் பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிடில் ஜாக்டோ ஜியோவின் சார்பில் செப்டம்பர் 16 அன்று சேலத்தில் மாவட்டத் தொடர்பாளர்களின் உயர்மட்டக் கூட்டமும், செப்டம்பர் 24 முதல் 29 வரை தற்செயல் விடுப்பு போராட்ட பிரச்சார பயணமும்,அக்டோபர் 4 அன்று ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டமும்,13 அன்று சேலத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடும்,19 முதல் 23 வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கான பிரச்சார பயணமும் அக்டோபர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முதுகலைபட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் சந்திரபோஸ்,உயர்நிலை - மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொறுப்பாளர் குமரேசன்,தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் வின்சென்ட்,வருவாய்த்துறை அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்..