மாலை 6.10 அளவில் காலமானார் 
சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இன்று ( ஆக.,7) மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த, 'டிரக்கியோஸ்டமி' என்ற, செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது. 

மஞ்சள் காமாலை
அக்கருவி மாற்றப்பட்டதால், கருணாநிதிக்கு தொற்று உருவானது. இதனால், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. சளித் தொல்லை காரணமாகவும், அவர் அவதிப்பட்டார். சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 28 நள்ளிரவில், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, உடல் நிலை மோசமானது. அதையடுத்து, அதிகாலை, 1:30 மணிக்கு, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.

காலமானார்
இருப்பினும் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால்,அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை கேட்ட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.