கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட
பிரச்னைகளும் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி  நிறுவனம் (எய்ம்ஸ்), கோவா, ஹரியானா, குஜராத் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 14,000 பள்ளி மாணவர்களிடம் உயர் ரத்த அழுத்தம் குறித்த ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் மாணவ, மாணவிகள் சம எண்ணிக்கையில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 23 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்தம் அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். 

This article will continue after this advertisement

இந்த ஆய்வில், உயர் ரத்த அழுத்தம் மணிப்பூர் மாணவர்களிடையே 30 சதவிகிதமாகவும், ஹரியானாவில் 26.5 சதவிகிதமாகவும், குஜராத்தில் 13.6 சதவிகிதமாகவும், கோவாவில் 10 சதவிகிதமாகவும் உள்ளது. கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களான கோவாவிலும், குஜராத்திலும் உயர் ரத்த அழுத்தம் குறைவாகவும், நாட்டின் உள் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில்  வசிக்கும் மாணவர்களிடையே உயர் ரத்த அழுத்தமாக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியாலஜி துறையின் பேராசிரியர் மருத்துவர் அனிதா சக்சேனா, ``மாணவர்களிடையே வாழ்க்கை முறை மாற்றமும், முறையான உடற்பயிற்சி இல்லாததுமே  உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம். மாணவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத் தீனிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முக்கியமான காரணியாக உள்ளது" என்றார் .

`` பள்ளி மாணவர்களிடையே ரத்தஅழுத்தம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்' எய்ம்ஸ் மருத்துவர்கள்