.

அன்னவாசல்,செப்.11: வீட்டில் தனிக் கழிப்பறை இல்லாத மாணவர்கள் தம் பெற்றோரை தனிநபர் கழிவறை கட்டவும்
பயன்படுத்தவும் வலியுறுத்தம் செய்திடல் வேண்டும் என அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் மாணவர்களை கேட்டுக் கொண்டார்..
  
குழந்தைகளிடம் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்  சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் அன்னவாசல் வட்டார வளமையத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது...

போட்டியினை தொடங்கி வைத்து அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் பேசியதாவது: திறந்த வெளியில் மலம் கழிப்பதால் குழந்தைகளின் உடல் மற்றும்,மன வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதுடன்,குடற்புழு உருவாக்கமும் அதனால் இரத்த சோகை ஏற்படவும் காரணமாக அமைகின்றன..
மோசமான சுகாதாரத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது..எனவே பள்ளிக் குழந்தைகளிடையே  தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...குழந்தைகளிடையே சுகாதாரப் பழக்க வழக்கங்களை பள்ளிப் பருவத்திலே பயிற்றுவித்தோம் எனில் தூய்மையான தமிழகத்தை உருவாக்க முடியும்..மேலும் மாணவர்களாகிய நீங்கள் வீட்டில் தனிக்கழிப்பறை இல்லை எனில் பெற்றோர்களிடம் தனிநபர் கழிவறை கட்டவும், பயன்படுத்தவும் வலியுறுத்த  வேண்டும் என்றார்.
 
முன்னதாக பள்ளி அளவில் கழிவறைபயன்பாடு மற்றும் பாதுகாப்பான சுகாதாரம்,தன்சுத்தம் மற்றும் தூய்மை,சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் நோய்கள் போன்ற தலைப்பின் கீழ் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும்,ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியும்,ஒன்பது முதல் பத்து வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும்,பதினொன்று மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விநாடி வினா போட்டியும் நடைபெற்றது..போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
  
போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்..