திருவள்ளூர் மாவட்ட பகுதியினருக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விழிப்புணர்வு அவசியம் என, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார்
அறிவுறுத்தினார்.கல்பாக்கம் அடுத்த, லட்டூரில், நேதாஜி நற்பணி இயக்கம், தன்னார்வ அறக்கட்டளை மூலம், இப்பகுதியினர் பயன்பாட்டிற்காக, கணினி மற்றும் அறிவுசார் நுால்களுடன், கவுதம புத்தர் அறிவுசார் மையம் அமைத்துள்ளது.மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, நேற்று, மையத்தை துவக்கி பேசியதாவது:தற்காலத்தில், தகவல்கள் அறிவது முக்கியம். கிராமப்புற மக்கள், தகவல்கள் அறிவது குறைவு. 40 சதவீத மக்கள், விளிம்பு நிலையிலும், பழமை மாறாமலும் உள்ளனர். 30 வயதிற்குள், கல்வியை முடிக்க முயற்சிக்க வேண்டும். அனைத்து கிராமத்திலும், நுாலகங்கள் அமைக்க வேண்டும். அவற்றை மக்கள் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பேசியதாவது:கிராம பிரச்னைகள் குறித்து, தகவல் உரிமை சட்டத்தின்கீழ், அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டாலே, வீடு தேடி பதில் வரும். இச்சட்டத்தால், நீதிமன்றங்களின் சுமை குறைந்துள்ளது.அரசு வேலைவாய்ப்பிற்கான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, பெரும்பாலோர் அறியவில்லை. 18 வயது நிரம்பி, பத்தாம் வகுப்பு படித்தாலும், அரசு வேலை உண்டு.அரசு பணிகளுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியினர், மிக குறைவாகவே விண்ணப்பிக்கின்றனர். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கல்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.