கிராமப்புற பள்ளிகளில் உள்ள உயர் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை காண்பது
அரிதாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் டிஜிட்டல் வசதியுடைய 100 பள்ளி வகுப்பறைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது

கிராமப்புற பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கணிதம், ஆறிவியல் ஆகிய பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளது. ஏனெனில் அந்த பாடங்களை நடத்தும் திறமையான ஆசிரியர்கள் அதே பள்ளிகளில் நீடிப்பதில்லை

பள்ளிக் கல்வியில் இருக்கும் இந்த சீரற்ற நிலை சரிசெய்யப்பட வேண்டும்.அப்போதுதான் சமூகத்தில் அறிவியலின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்

டிஜிட்டல் பள்ளி வகுப்பறைகளின் உதவியுடன் மின்காந்த அலைகளின் ஓட்டம், அணு மற்றும் தாவர, விலங்கு செல்களின் வடிவமைப்பு ஆகியவற்றை மாணவர்களுக்கு எளிதாக புரிய வைக்க முடியும். 3-டி படங்களின் மூலம் கடினமான கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கோட்பாடுகளை எளிதாக விளக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கியுள்ளது

மக்கள் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை எளிதாக தீர்த்துக் கொள்வதற்கும் , அறிவை வளர்த்து கொள்வதற்கும் உதவும் வகையில் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுத் தருகின்றனர். இது வரவேற்க வேண்டிய விஷயம்

எனினும், மாணவர்கள் அவர்களது தாய்மொழியை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் கல்வியுடன் சேர்த்து திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று அவர் பேசினார்

மேலும், இந்த டிஜிட்டல் வசதியை பள்ளிகளில் கொண்டு வருவதற்கு உதவி செய்த முஸ்கான் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும், ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தையும் அவர் பாராட்டினார்