பிளஸ்2 மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்விக்கான தகுதியாக கருதாமல் பிளஸ் 1 மதிப்பெண்களையும் தகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் சமூக பொருளாதார பின்புலம் மற்றும் உளவியல் பாங்கு ஆகியவற்றை நன்கு அறிந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சவால்கள் உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை குறித்து புரிதலும் அக்கறையும் கொண்டு கல்வித் தளத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் கல்வி செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழக கல்வி நலனில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து உயர்கல்விக்கான கருத்துகளை அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பிளஸ் 1 தேர்வை நடத்திக் கொண்டே அதன் மதிப்பெண்களை உயர்கல்வியில் சேர்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு குறித்து வெளியிட்ட அறிவிப்பின் குறிக்கோள் நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விடும்.
* அரசின் கொள்கை மாற்றம் தனியார் பள்ளிகளின் அழுத்தம் காரணமாக நேர்ந்துள்ளது. மேனிலைக் கல்வியில் தனியார் பள்ளிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனால், தனியார் பள்ளிகள் இடும் கட்டளையை அரசு துறை நிறைவேற்றும் நிலை உள்ளது.
* தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத் தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்ற பொத்தாம் ெபாதுவான காரணத்தை ஏற்க முடியாது. பிளஸ் 1 மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துக் ெகாள்ளாமல் விடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதையும் ஏற்க முடியாது.
* பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறையும் நிலை ஏற்படும். தனியார் பள்ளிகளில் படித்தால்தான் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மனநிலை ஏற்படும். இதனால் தனியாருக்கு கல்வி வணிகம் கூடும்.
* மேனிலைக் கல்வி என்பது இரண்டு ஆண்டு படிப்பைக் கொண்ட ஒரு பாடத்திட்டம். இரண்டாம் ஆண்டு படிப்பு முதலாம் ஆண்டு படிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டு ஆண்டுக்கும் முழுமையாக பாடங்கள் நடத்தப்பட்டால்தான் உயர்கல்விப் பாடங்களை புரிந்து கொள்ள முடியும்.
* நாடு தழுவிய போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாமல் போவதற்கு பிளஸ் 1 பாடங்கள் படிக்காமல் போவதுதான். அரசின் புதிய முடிவால் இந்த அவலம் மீண்டும் தொடரும். எனவே, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் ேதர்வு நடத்தி அதன் மதிப்பெண்களையும் உயர்கல்விக்கு எடுத்துக் கொள்வதே சரியான தீர்வாகும். இந்த அணுகுமுறையே குழப்பமற்றதாகவும் மன அழுத்தம் அற்றதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அரசாணையை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். எளிமையான தேர்வுமுறைகள், பாடச்சுமை குறைப்பு ெதாடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகியவையே மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.