திருச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:





ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், காணொளி காட்சி மூலமாக மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 3,000 பள்ளிகளில் அடுத்த மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கு பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

9 முதல் 12ம் வகுப்பு வரை நவம்பர் இறுதிக்குள் அனைத்து வகுப்பறையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு 620 பள்ளிகளில் நவீன அளவில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது.




மாணவர்கள் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சி செய்ய மத்திய அரசு உதவியோடு ஒரு பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க உள்ளோம். தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவேண்டும். வெற்றி பெறவேண்டும் என ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



ஆசிரியர் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் குறித்து ஆசிரியர்களிடத்தில் அரசு முதன்மைச் செயலர் அரசின் கொள்கை என்ன என்பதை விளக்கியுள்ளார். அதன் பிறகு ஆசிரியர்கள் எடுக்கும் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.