எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.
எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.
இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார்.
எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.
எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும். இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று.
சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும். எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.