சிவகங்கை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களில் சுமார் 80 சதவீதத்தினர் செல்போன்கள் வைத்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் செல்போன் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அவைகளை புத்தக பைகள், சாப்பாட்டு பை உள்ளிட்டவைகளில் மறைத்து வைத்து இடைவேளை நேரங்களில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். பள்ளி விட்டு செல்லும்போது முழுமையாக செல்போன்களை பயன்படுத்தி கொண்டே வீடுகளுக்கு செல்கின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் எழுவதால் இப்பள்ளி மாணவர்கள் கட்டுப்பாடின்றி பள்ளிகளிலும் தைரியமாக செல்போன் பயன்படுத்துகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளிடமும் இதேநிலையே காணப்படுகிறது. தற்போது டச் வகை செல்போன்கள் சுமார் ரூ.2ஆயிரம் விலையிலிருந்தே கிடைப்பதால் இந்த வகை செல்போன்களையே மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மாணவ, மாணவிகள் செல்போன்களை பள்ளிகளுக்கு கொண்டு வரக்கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்ததாவது, எல்லாவற்றையும் ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என தங்களுக்கு ஏதும் பொறுப்பில்லை என பெற்றோர்கள் ஒதுங்கிக்கொள்வது பொறுப்பற்ற செயல். மாணவ, மாணவிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது என பெற்றோர்களுக்கே தெரியும். செல்போன்கள் பள்ளியில் மட்டுமல்ல, பொதுவாகவே படிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் வீடுகளில் பயன்படுத்தும்போது அவற்றை பறிமுதல் செய்தால் பிரச்னை இல்லை. ஆனால் பெற்றோர்கள் இது குறித்து கண்டுகொள்வது இல்லை. தனியார் பள்ளிகளில் கடுமையாக ஆய்வு செய்து செல்போன் பயன்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் அவர்கள் மாணவர்கள் மீது ஓரளவிற்கு மேல் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. இது அவர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது. செல்போன்கள் பள்ளிகளுக்கு கொண்டு வருவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை இணைந்தே தடுக்க முடியும். மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்துவதில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது என்றனர்.