தமிழில் தேர்வு நடத்த முடியவில்லை என்றால் டி.என்.பி.எஸ்-ஐ மூடங்கள் என்று பா.ம.க தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால் அது தமிழை விருப்பப்பாடமாக எடுத்த 4.80 லட்சம் பேரின் வாய்ப்புகளை பாதிக்கும். மற்ற போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் தமிழில் விடைத்தாள் தர மறுப்பது நியாயப்படுத்த முடியாத சமூக அநீதியாகும்.
தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்குத் தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப் போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத் தெரியவில்லை. தமிழர்களுக்கு எதிரான சதியாகவே தோன்றுகிறது. அண்மையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்பட்டது. விரைவில் நடைபெறவுள்ள கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் தொகுதி தேர்வுகளும் திட்டமிட்டு ஆங்கிலமயமாக்கப்படுகிறது.
பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்போரில் பெரும்பான்மையினர் தமிழில் தேர்வெழுதவே விரும்புவர். ஆனால், அந்த வாய்ப்பைப் பறித்து ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நிலையை உருவாக்குவதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி, அனைத்து போட்டித் தேர்வர்களையும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்புவது தான் அந்த சதியாகும். போட்டித் தேர்வர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பணியாளர் தேர்வாணையம் தனியார் பயிற்சி நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கத் துடிப்பது நியாயமானதல்ல.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறி ஆங்கிலத்தில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு பதிலாக, அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுக்கான வினாத்தாள் முழுமையாக தமிழில் தயாரிக்கப்படாவிட்டால் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைத்து, தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டவுடன் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.