சார்பதிவாளர் கையொப்பம் மற்றும் அரசு முத்திரையுடன் வில்லங்க சான்றை இணையதளத்தில் பெறும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்கிறார். 

சொத்துக்கள் வாங்கும் போது சம்பந்தப்பட்ட சொத்தில் பிரச்னை எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிய வில்லங்க சான்று பார்ப்பது வழக்கம். இதற்கு ₹124 வரை மட்டுமே செலவாகும். ஆனால், கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் கூட குறித்த நேரத்தில் சான்று கிடைப்பதில்லை. இதை தடுக்க இணையதளம் மூலம் வில்லங்க சான்று பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால் அதில் சார்பதிவாளர் கையெழுத்து மற்றும் அரசு முத்திரை இருப்பதில்லை. அதனால் வங்கிகள் இதை ஆவணமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். குறிப்பாக வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சார்பதிவாளர்கள் கையொப்பத்துடன் அரசு முத்திரையுடன் சான்றுடன் கூடிய வில்லங்க சான்று இருக்க வேண்டும். இதற்காக, பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர்கள் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக வில்லங்க சான்று வழங்காமல் காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சார்பதிவாளர்கள் கையொப்பத்துடன் அரசு முத்திரை, சார்பதிவாளர் கையொப்பத்துடன் கூடிய வில்லங்க சான்று திட்டத்தை இணையதளத்தில் பெறும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கி அதிகாரிகள் சார்பதிவாளர்கள் கையொப்பத்துடன் அரசு முத்திரையுடன் இருக்கும் வில்லங்க சான்றிழை அங்கீகரிக்கின்றனர்.வில்லங்க சான்றுக்கு விண்ணப்பிக்கும் போது, அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். வில்லங்க சான்று தயாராகி விட்டது என்பது குறித்து பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வரும். விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் வில்லங்க சான்று தரப்படும். இந்த திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்' என்றார்