ஆசிரியை செல்வமீனாள் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை தீயணைப்பு துறை அலுவலர் நாகராஜ் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்.நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ராஜவேல்,தீயனைப்போர் தமிழ்செல்வம் , அறிவழகன்,கண்ணன்,திருநாவுக்கரசு,ஆனந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.மாணவர்கள் காயத்ரி,பாலசிங்கம்,சபரி,சந்தியா,நித்யகல்யாணி,திவ்யதர்ஷினி ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது . முதலுதவி செய்வது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கத்தின் மூலம் தீயணைப்பு அலுவலர் நாகராஜ் குழுவினர் செய்து காண்பித்தார்கள் .
மேலும் விரிவாக :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையின் சார்பாக நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியில், தேவகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜ் மாணவர்களிடம் முதுலுதவி செய்வது தொடர்பாக விளக்கி கூறும்போது ,
மின்கசிவின்போது லிப்ட் பயன்படுத்தாதீர்கள் :
வணிக நிறுவனங்கள்,திருமண விழாக்கள் ,கோவில் திருவிழாக்கள்,உணவகங்கள்,தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் கூடும் மக்கள் மின் கசிவினாலோ , கவன குறைவினால் ஏற்படும் தவறுகளினாலோ விபத்தில் சிக்கி கொண்டால் கூச்சல் போட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.எக்காரணத்தை கொண்டும் மின் தூக்கி பயன்படுத்துதல் கூடாது.இத்தருணத்தில் குழந்தைகள்,முதியவர்கள்,கர்ப்பிணிகள் ஆகியோருக்கு வழிவிட்டு உதவ வேண்டும்.அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.அவசர வழிகளை பயன்படுத்த வேண்டும்.
கிடைக்கும் பொருளை வைத்து முதலுதவி செய்யுங்கள் :
விபத்துக்களில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பது குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.முதலில் கிடைக்க கூடிய பொருளை வைத்து முதலுதவி செய்தல் வேண்டும்.ரத்த கசிவு உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.பின்பு காயம் பட்ட இடங்களை சுற்றி துணியை வைத்து மென்மையாக கட்ட வேண்டும்.காலை மேல் நோக்கி தூக்கி,மூக்கை முடிந்த அளவு மூடி ,தொண்டையை மேல் நோக்கி வைத்த நிலையில் சுவாசிக்க செய்தல் வேண்டும்.பின்பு மருத்துவ நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
கன்னத்தின் துடிப்பை உற்று கவனியுங்கள் :
கன்னத்தில் துடிப்பு ஏற்படுகின்றதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.இதயத்தில் இரு கைகளையும் வைத்து அழுத்தி ரத்த சுழற்சி சீராக இருப்பதற்கு சிகிச்சை தரவேண்டும்.சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீர்நிலைகளில் விழுந்துவர்களை தலை முடியை பிடித்து தூக்குங்கள் :
கிணற்றில்,ஆற்றில்,ஏரியில் தவறி விழுபவர்களை முதலில் தலைமுடியை பிடித்து தூக்குதல் வேண்டும்.பக்கவாட்டில் பிடிக்கக்கூடாது.பாதிக்கப்பட்டவர்களை நீளமான கயிறுகளை வீசி கரைக்கு இழுத்தல் மற்றும் மிதவைகளை பயன்படுத்தி அருகில் சென்று காப்பாற்றி வரலாம்.முறையான நீச்சல் பயிற்சி அறிந்திருந்தால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றி சுவாச பயிற்சி கொடுத்து ரத்த ஓட்டம் சீராக இயங்க வைக்கலாம்.தண்ணீரில் மூழ்குவோர் மூன்று வகையில் மேலெழும்பி வருவார்கள்.விடா முயற்சியால் அவர்களை காப்பாற்றலாம்.
விஷவாயு கிணற்றில் விழுந்தவர்களை கவனமாக காப்பற்றவது எவ்வாறு ?
பயன்படாத கிணறுகளில் விஷ வாயு இருக்க வாய்ப்புகள் உண்டு.அதற்கு தண்ணீரை பாதிக்கப்பட்டோரின் மேலே தெளித்தால் உணர்வு நிலை ஏற்படும்.பின்பு தீயணைப்பு நிலையத்திற்கோ அல்லது மருத்துவ ஊர்திக்கு தகவல் அளிக்கலாம்.
காசு முழுங்கியதை வெளியே எடுக்கும் முறை :
குழந்தைகள் பெரிய மாத்திரைகளை ,காசுகளை விழுங்கினால் ,அவர்களை தலைகீழாக பிடித்து பின்புறமாக தட்டினால் எளிதில் உள்ளே சென்ற பொருள் வெளியே விழுந்துவிடும்.
வலிப்பு நோய்க்கு முதலுதவி செய்வது எப்படி ?
காக்கா வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டோர் கையில் சாவிகள் கொடுக்க கூடாது.அவை காயங்களை ஏற்படுத்தும்.காதுகள் இரண்டையும் மூடிய நிலையில் வைத்து ஒரு புறம் சாய்ந்து படுத்தால் குணமாக்கி விடலாம் என்று சொன்னார்கள்.
விஷம் குடித்தவர்களை காப்பாற்றுவது எப்படி ?
விஷம் குடித்தால் இரண்டு வகை பாதிப்புகள் உண்டாகும் .செல்களை அழிப்பவை ,செல்களை அழிக்காதவை .பூச்சி மருந்து போன்ற விஷங்களை அருந்தினால் உப்பு தண்ணீர் கொண்டு வாந்தி எடுக்க வைக்க வேண்டும்.
ஆசிட் போன்ற மருந்துகளை குடித்தால்,கோதுமை மாவு போன்று மாவு பொருள்களை தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தகவல்கள் சொல்லப்பட்டது.