தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.  க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது:  தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவற்றில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

இதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம்,  ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.

176 பாடங்கள் வடிவமைப்பு:   இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும்.  ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும்.  தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.  இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

வரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

Whats App Group link