பணி நியமனம் செய்யப்பட்டு 3 மாதங்களாகியும் ஊதிய பிறப்பிப்பு ஆணை வெளியிடப்படாததால் தமிழகம் முழுவதும் 58 மாற்றுத்திறன் ஆசிரியர்கள் ஊதியம் பெறாமல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகள் மற்றும் வட்டார வள மையங்களின் கீழ் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் பயிலும் பள்ளிகளில், சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற கண் பார்வையற்ற, தசை சிதைவடைந்த மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மாவட்ட அளவில் அதிக மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ள ஒரு வட்டாரத்தைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி கற்பிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
இதையொட்டி கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, 202 வட்டாரங்களில் சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற மாற்றுத்திறன் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற 58 மாற்றுத்திறனாளிகள் 2017ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு ரூ.9,300 - ரூ.4,600 - ரூ.34,800 என்ற விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட போதும், அதற்கான ஆணை இதுவரை வெளியிடப்படாததால் கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
மேலும் இவர்கள் தனிச்சையாக செயல்பட முடியாததால், தங்களின் தேவைக்காக உதவியாளர்களையும் நியமித்துள்ளனர். தங்களுக்கான ஊதியம் கிடைக்காத நிலையில், உதவியாளர்களுக்கும் சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியது:
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் 58 பேருக்கான தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அதற்கான ஊதிய பிறப்பிப்பு ஆணை இதுவரை வெளியிடவில்லை. எனவே தமிழக அரசு அதற்கான ஆணையை உடனடியாக வெளியிட்டு, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் மாற்றுத்திறன் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாற்றுத்திறன் குழந்தைகளின் நலன் கருதி, அந்த காலி இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கல்வியியல் பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக தகுதித் தேர்வு நடத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்