புதுக்கோட்டை,டிச.22: கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் கொடுத்த துபாய்வாழ் தமிழ் குடும்பத்தினரின் செயல் போற்றுதலுக்குரியது என கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு சோலார் மின்விளக்குகள் வழங்கும் விழா நடைபெற்றது..
விழாவில் பள்ளி மாணவிகளுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கி கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் பேசியதாவது:
கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்கள் மரங்களை இழந்த விவசாயிகள் மட்டும் அல்ல.மின்சாரத்தை இழந்த மாணவர்களும் தான்.குறிப்பாக பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் இன்னும் மின்வசதி கிடைக்காத கிராமங்களில் படிக்க கூடிய மாணவர்கள் பயில்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.விவசாயிகள் தங்களது நிவாரணத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில் மாணவர்கள் தங்களுடைய கல்வித் தேவைகளுக்காக யாரிடம் போராடுவது என்னும் சூழலில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு துபாயில் வசிக்கின்ற திருச்சியைச் சேர்ந்த தம்பதியர்களான ரம்யாகிருஷ்ணன் குடும்பத்தார் ரூ.35 ஆயிரம் மதிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பொதுத் தேர்வை எழுதவுள்ள 75 மாணவிகளுக்கு சோலார் விளக்குகளை நன்கொடையாக வழங்கி உதவினர்.தங்களது ஒரு வார கால விடுமுறையை குடும்பத்தாரிடம் செலவிட வந்த இடத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு கொடுத்தது போற்றுதலுக்குரிய செயல் ஆகும் என்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் ஆசிரியர் கொடியரசன் வரவேற்றுப் பேசினார். முடிவில் பொறுப்பு தலைமைஆசிரியர் குணநாயகம் நன்றி கூறினார்