அன்னவாசல்,டிச.19: பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து படிக்க வைத்திட வேண்டும் என அன்னவாசல் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி பெற்றோர்களை கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அன்னவாசல் காவல்நிலையத்தின் சார்பில் நோட்,பேனா,அளவுகோல்,பென்சில் வழங்கும் விழா மற்றும் பள்ளிஆசிரியர்கள்,மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்,பேனா,பென்சில் வழங்கியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருது வழங்கிஅன்னவாசல் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி பேசியதாவது: பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து படிக்க வைத்திட வேண்டும்.குடும்பத்தில் கஷ்டம் நிலவினாலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த கூடாது.மாணவர்களாகிய நீங்களும் நன்றாக படிக்க வேண்டும்.நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.மேலும் மரக்கன்றுகள் வளர்ப்பது ஒரு இயற்கையான நிகழ்வு தான்.ஆனால் இங்குள்ள மாணவர்களோ பள்ளியில் கொடுத்த மரங்களை நடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவற்றை முறையாக பராமரித்து வளர்த்து வருவதை நினைக்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது என்றார்..
முன்னதாக அன்னவாசல் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்,பென்சில்,அளவுகோல்,பேனா வழங்கப்பட்டது ..பின்னர் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பில் உருவம்பட்டி பள்ளிக்கு வழங்கப்பட்ட கலாம் கண்ட கனவுப்பள்ளி விருதினையும்,மாணவர்களிடம் மரக்கன்றுகளை வழங்கி வளர்ப்பதற்கு உற்சாகமாக இருந்த தலைமையாசிரியர் ஜெ.சாந்திக்கு வழங்கப்பட் கலாம் கண்ட கனவு தலைமையாசிரியர் விருதினையும்,ஆசிரியர் கு.முனியசாமிக்கு வழங்கப்பட்ட கலாம் கண்ட கனவு ஆசிரியர் விருதினையும்,பள்ளியில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை சிறப்பாக நட்டு பராமரித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கலாம் கண்ட கனவு மாணவர்கள் விருதினையும் அன்னவாசல் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி வழங்கினார்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் ஜெ.சாந்தி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் அன்னவாசல் காவல்நிலைய காவலர்கள் பொன்னையா,ராஜா,பிரபாகரன்,ஜெயந்தி மற்றும் நிலையபட்டி தலைமைஆசிரியர் ரவிச்சந்திரன்,சமூக ஆர்வலர் அபிபுல்லா,கிராம கல்விக் குழுத் தலைவர் கருப்பையா,ஊர் நிர்வாகி கல்யாணராமன் மற்றும் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முக்காணமலைப்பட்டி ரோஜாமெடிக்கல் உரிமையாளர் முகம்மது சாதிக்பாட்ஷா செய்திருந்தார்..
முடிவில் ஆசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.