இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார
.
இதுகுறித்து, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், மன்னிப்போம், மறப்போம் என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதன் அடிப்படையில், ஓ.ராஜா கட்சியில் சேர்க்கப்பட்டார்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே நான்கு மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதே தெளிவாகத் தெரிவித்தோம். அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்ய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினோம்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தி ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகள் தொடர்பாக திடீரென எதையும் செய்து விட முடியாது. கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாக பேச்சுவார்த்தையின் போதே தெரிவித்தோம். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்டோம். தங்களது கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். அரசின் நிதிச் சுமையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உணர வேண்டும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம். ஊதியம், ஓய்வூதியம், வளர்ச்சித் திட்டங்களைச் செய்து கொடுக்க வேண்டும். எனவே, இடைநிலை ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்