தேவையை கண்டுபிடிப்பின் தாய் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு நிகழ்வு. பில்லியர்ட்ஸ் விளையாட்டிற்குத் தேவையான சிறு உருண்டை வடிவிலான பந்துகள் யானைத் தந்தங்களில் செய்யப்பட்டு
வந்தது.
நாளடைவில் பில்லியர்ட்ஸ் விளையாடுவோர் அதிகமாகவே, யானைகளை வேட்டையாடும் பழக்கமும் அதிகரித்தது. நியூயார்க் நிறுவனம் ஒன்று 1869-இல் தந்தத்திற்கு மாற்றாக ஒரு பொருளை கண்டுபிடிப்பவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு தருவதாக அறிவித்தது.
ஜான் வெஸ்லி ஹையட் என்பவர், பிளாஸ்டிக் என்ற பொருளை செயற்கையாகக் கண்டுபிடித்தார். இந்த பிளாஸ்டிக், மரம், உலோகம், தந்தம், ஆமை ஓடு, மிருகங்களின் கொம்பு, சணல் போன்ற பொருட்களுக்கு மாற்றாக அமைந்தது.
பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பிளாஸ்டிக் நுழைந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பால் யானைகள், ஆமைகள், ஏனைய மிருகங்கள் காப்பாற்றப்பட்டன. இயற்கையை அழிக்காமல் செயற்கையான ஒரு புதிய பொருள் மனிதனின் தேவைகளுக்கு ஈடுகொடுத்ததால் கண்டுபிடித்தவரை புகழ்ந்து போற்றினார்கள்.
1907-இல் லியோ பேக்லேண்ட், அசல் தந்தம் போன்று பிளாஸ்டிக்கை மெருகு ஏற்றினார்.
தீப்பற்ற இயலாத இந்த செயற்கை பிசின் மூலம் மின்கம்பிகளுக்கு பிளாஸ்டிக் உறையை அறிமுகம் செய்தார். இந்த கண்டுபிடிப்பு அமெரிக்காவை விரைவாக மின் மயமாக்க உதவியது.
நீண்ட காலம் உழைக்க வல்லது. வெ ப்பத்தை தாங்கக் கூடியது என்பதால் கட்டுமான பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும், சாலை வாகனங்கள், தொடர் வண்டிகள், கப்பல், விமானம் போன்ற ஊர்திகளுக்கும் பிளாஸ்டிக் பெரும் பயனைத் தந்தது. பிளாஸ்டிக் தொழில் அசுர வளர்ச்சி கண்டது.
இரும்பு, மரம், துணி, சணல் போன்ற இயற்கையானவற்றை அழித்து எங்கும் பிளாஸ்டிக் குடி கொண்டது. எளிதில் உடையாத, காற்று புகவியலாத பொருள் என்பதால் இது மனித குலத்திற்கு மாபெரும் வரமாக கருத்தப்பட்டது.
இரண்டாவது உலகப் போரில் அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு பிளாஸ்டிக் துணை நின்றது. வீரர்களின் உடல் கவசம், தலைக் கவசம், விமானத்தின் சன்னல்கள் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டன.
வாலஸ் காரோத்தர்ஸ் 1935-இல் நைலானைக் கண்டுபிடித்தார். இது பாராசூட் செய்ய உதவியது. அமெரிக்காவில் பிளாஸ்டிக் உற்பத்தி 300 மடங்கு உயர்ந்தது. உலகப் போர் முடிந்தாலும் பிளாஸ்டிக்கின் உற்பத்தி குறையவில்லை.
போர் முடிந்த பின்னரும், எல்லாரும் ஏற்றுக் கொள்ளத் தக்க விதத்தில் எல்லா இடங்களிலும், மறுபடியும் பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று டைம் பத்திரிகை தலையங்கம் எழுதியது.
அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாடு பெருகியது. இதனால் அமெரிக்கர்கள் பிளாஸ்டிக் யுகமாக இதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
1960-இல் முதன் முதலாக பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் மிதப்பதை மக்கள் கண்டனர். இதனால், சுற்றுச் சூழல் கெடுவதை விஞ்ஞானிகள் உணரத் தொடங்கினர். பிளாஸ்டிக் ரசாயனங்களால் இயற்கைக்கு தீங்கு நேருவதைக் கண்டார்கள்.
1969-இல் கலிபோர்னியா கடற்கரை எங்கும் எண்ணெய்ப் படலம் காணப்பட்டது, விஞ்ஞானிகளை கவலை கொள்ளச் செய்தது. 1968-இல் திரைப்படம் ஒன்றின் மூலம் பிளாஸ்டிக்கின் தீமை குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. கயஹோகா என்ற ஆறு பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்தது. ஒகியோவில் ஏற்பட்ட தீ விபத்து, அமெரிக்காவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை கொஞ்சம், கொஞ்சமாக விலக்கியது. பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் தீமையை அகற்றமுன் வந்ததனர். பெரும்பான்மை அமெரிக்கர்கள் ரிச்சர்ட் கார்சன் 1962-இல் ஒரு நூலில் பிளாஸ்டிக் ரசாயனத்தின்அபாயம் வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தனர்.
பிளாஸ்டிக்கின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. முதலில் சிறு கடைகளில் புழங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பிளாஸ்டிக்கின் தீமை மனிதர்களின் உடல் நலத்தையும் பதம் பார்க்கத் தொடங்கியது. உடலின் ஹார்மோன் சுரப்பியைத் தாக்கத் தொடங்கியது. இதனால் புதுப்புது நோய்களும், புற்று நோயும் பரவத் தொடங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். செயற்கை கண்டுபிடிப்பு பொருள்களை விலக்கி, இயற்கையான மரபு சார்ந்த அம்சங்களில் பற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகள் அமைக்கவும், ஆலைகளின் எரிபொருளுக்கு துணையாகவும் உபயோகிக்கத் தொடங்கினர். இதனால், பத்து சதவீத பிளாஸ்டிக் கழிவு மறு சுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு வந்தது. மீதி, நஞ்சாகவே நிலைத்து நிற்கிறது. அமெரிக்க மக்களின் அச்சத்திற்கு இலக்கான பிளாஸ்டிக், இதே கால கட்டத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஊடுருவத் தொடங்கியது.
1960-70- களில் தொடங்கிய பிளாஸ்டிக்கின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. அண்மையில் இந்தோனேஷியா நாட்டில் கபோட்டா தீவில் செத்து கரை ஒதுங்கிய 9.5 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலத்தின் வயிற்றை அறுத்துப் பார்த்தபோது 115 பிளாஸ்டிக் குவளைகள், 25 பிளாஸ்டிக் பைகள், இரண்டு பிளாஸ்டிக் மது குப்பிகள், நான்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், ஆயிரம் மெல்லிய பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்த பிளாஸ்டிக் பொருள்களை இரையாக உட்கொண்டதால்தான் அது இறந்தது என்பதை கண்டார்கள். இந்தோனேஷியா கடலில் மட்டும் ஆண்டுதோறும் 1.29 மில்லியன் மெட்ரிக் டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் நாட்டில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. அண்மைக் காலங்களில் இது 160 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில்கூட இந்த அளவு இல்லை.
இந்தியாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பிளாஸ்டிக் வணிகம் நடைபெறுகிறது. நாடெங்கிலும் ஏறக்குறைய 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பிளாஸ்டிக் தொடர்பான தொழில்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு உள்ளனர்.
தில்லிக்கு அடுத்தபடியாக சிங்காரச் சென்னையும், கொல்கத்தாவும்தான் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன.
மண்ணில் போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பலநூறு ஆண்டுகள் ஆனாலும் மக்குவது இல்லை. அவை எரியூட்டப்படுவதால் ஏற்படும் கொடிய நச்சுப் புகையால் மனிதர்களின் சுவாச மண்டலமே பாழாகி நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.
அண்மையில் மத்திய சுகாதாரத்துறை, பெண்கள் நல வாரியம் மற்றும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆய்வின் முடிவு நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 2,60,028 பேரும், மகாராஷ்டிரத்தில் 1,08,038 பேரும், பிகார் மாநிலத்தில் 96,967 பேரும் நச்சுக் காற்றை தொடர்ந்து சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
இந்த ஆய்வு முடிவின்படி, கோவா, கேரளம் போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் வெண்புகை, வளி மண்டலத்தை மட்டுமல்லாது நிலத்தையும் நீரையும்கூட நஞ்சாக்குகிறது.
இந்த மாசடைந்த காற்றை சுவாசிக்கும் மக்களின் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, சுவாசக் குழல், உணவு ஜீரண மண்டலம், சிறு குடல், பெருங்குடல் போன்ற இடங்களில் புற்று நோய் கிருமிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
2017-ஆம் ஆண்டில் மட்டும் தலைநகர் தில்லியில் 12,322 பேர் சுவாசக் கோளாறுகளால் உயிரிழந்தனர். இந்தியாவில் 77 சதவீத மக்கள் இந்த நச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றனர். ஒரு கோடி மக்களில் 12.4 லட்சம் பேர் மாசடைந்த காற்றை சுவாசித்தால்தான் கடந்த 17 ஆண்டுகளில் இறந்தார்கள் என்ற புள்ளிவிவரம் நம்மை பயமுறுத்துகிறது.
மத்திய - மாநில அரசுகள் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ய விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் அதிரடியாக எதையும் செய்ய முடிவதில்லை.
மேலை நாடுகள், நமது விஞ்ஞான மோகத்தையும், பிளாஸ்டிக் ஆர்வத்தையும் கண்டு வருந்துகின்றன.
விஞ்ஞானத்தில் முற்றிய நாடுகள் எல்லாம், இயற்கையான சூழலை உண்டாக்க முயன்று வரும் வேளையில் நாம் செயற்கைக் கருவூட்டலில் தொடங்கி, துரித உணவை உண்டு, கொடிய நோய்களை வலிந்து ஏற்று கிடைத்தற்குரிய மானுடப் பிறவியை துயரக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
2019 ஜனவரி முதல் நாளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியின் வீழ்ச்சியே மனிதகுல வளர்ச்சி என்பதை உணருவோம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்


Whats App Group link