செவ்வாய் கிரகத்தில் உள்ள பனிப்பள்ளம் ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் பனிப்பள்ளம் அமைந்துள்ள புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் திட வடிவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் புதிய பனிப்பள்ளம் பற்றிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.
மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன்:
மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை இது அடைந்தது. தொடர்ந்து அது செவ்வாயை ஆராய்ச்சி செய்து வருகிறது. மார்ஸ் எக்ஸ்பிரெஸில் உயர் துல்லியம் மிக்க ஸ்டீரியோ ஒளிப்படக்கருவிகள் உள்ளன. இதன் மூலம் அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
15வது ஆண்டுவிழா:
இந்நிலையில், இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக புதிய சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்நிலப்பகுதியில் உள்ள கோரோலோவ் பள்ளத்தில் எடுக்கப்பட்டவை இப்புகைப்படங்கள்.
பனிப்பள்ளம்:
ஐந்து புகைப்படங்களின் தொகுப்பாக இந்த ஒற்றைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெரிய பள்ளத்தில் பனிக்கட்டிகள் நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளத்தின் மையத்தில் பெரும் பனிக்கட்டிகள் உள்ளன. அதாவது சுமார் 1.8 கி.மீ அடர்த்தியுடன் இப்பனிக்கட்டிகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பனிக்கட்டிகள்:
இந்த பள்ளமானது கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஆழமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மிக ஆழமான பகுதியில் பனிக்கட்டிகள் இருப்பதால், அதன் மேற்புரத்தில் செல்லும் காற்று, அந்தப் பள்ளத்தில் மேலும் ஒரு அடுக்காக உருவாகி விடுகிறது. இதனால், அதன் அடிப்புறத்தில் உள்ள பனிக்கட்டிகள் அப்படியே இருக்கின்றன.
இது தான் காரணம்:
இந்த காரணத்தினால் பனிக்கட்டிகள் வெப்பமாவதில் இருந்து தடுக்கப்படுகின்றன. காற்று ஒரு மோசமான வெப்பக்கடத்தியதாக இருப்பதால் கோரோலவ் பள்ளம் நிரந்தரமாகவே பனிக்கட்டிகளால் நிறைந்திருக்கிறது என இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் விளக்கம் அளித்திருக்கிறது.
கோரோலோவின் பெயர்:
இந்தப் பனிப்பள்ளத்திற்கு முன்னாள் தலைமை ராக்கெட் பொறியியலாளரும் ஏவுகணை வடிவமைப்பாளருமான செர்கெய் கோரோலோவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சோவியத்தின் விண்வெளி தொழில்நுட்பத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார். பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி திட்டங்களில் பணிபுரிந்தவர் கோரோலோவ். அவற்றில் முக்கியமானது, சோவியத் ஒன்றியத்தின் விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பிய மிஷன் உள்ளிட்டவற்றை அடக்கிய ஸ்புட்னிக் திட்டம் ஆகும்.

Whats App Group link