சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 302 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு போட்டி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் பணியாற்றி வந்த 243 சத்துணவு பணியாளர்கள், 59 அங்கன்வாடி பணியாளர்கள உட்பட மொத்தம் 302 பி.எட். பட்டதாரிகளை சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-12ம் ஆண்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் தெர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தெளிவுரை கோரப்பட்டது.
இதனை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் 2011-12ல் நடைபெற்ற சிறப்பு தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் கருத்துரு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பான அரசின் கடிதத்தில் விலக்கு அளிக்க கோரும் கோரிக்கையை நிராகரித்தும் அவர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்