அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக நேற்று கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைமை செயலக ஊழியர்களும் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு இடைவேளையில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று (திங்கள்) காலை வழக்கம்போல் தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வந்து, கையெழுத்து போட்டனர். ஆனால் யாரும் பணிக்கு செல்லாமல், தலைமை செயலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் முன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
பின்னர் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை கூடியது. இந்த கூட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும், தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமை செயலக ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் 30ம் தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.
பின்னர், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (பீட்டர் அந்தோணிசாமி), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (சண்முகராஜன்), தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு (சவுந்தரராஜன்), தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம் (எஸ்.மதுரம்), தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் (ராஜாராம்) மற்றும் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் (பாலமுருகன்) ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 6 சங்கங்களும் ஒன்றாக இணைந்து பல்வேறு காலகட்டங்களில் முதல்வருக்கு கோரிக்கைகள் வைத்திருந்தோம்.
ஆனால் இதுவரை அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது.எனவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்களும், மற்ற சங்கங்களின் போராட்டங்கள் போல் இல்லாமல் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து 1-4-2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7வது ஊதிய குழுவால் அறிவிக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்திட வேண்டும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் என கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி முதல்வர் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள 17பி உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 30ம் தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வோம். அப்படியும் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் 31ம் தேதி (வியாழன்) அன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் சேர்ந்து அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம். எனவே முதல்வரை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேட்டு கொள்வது என்னவென்றால், உங்களுக்கு எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பாலமாகத்தான் இருந்து வந்திருக்கின்றோம். ஆனால் எங்களையும் இந்த போராட்டத்துக்கு தள்ளிவிடாமல், இனியும் காலம் தாழ்த்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச வேண்டும். நிச்சயம் முதல்வர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் என்று நம்புகிறோம்.
இந்த போராட்டத்தால், தலைமை செயலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுகளும் இயங்காது. வேலைநிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அமைச்சர் சொன்னார் என்பதற்காக, பழைய ஓய்வூதியம் கிடைக்காது என்று சொல்லிவிட முடியாது. அமைச்சரின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போதே அறிவித்துள்ளார்கள். எனது தலைமையிலான அரசு அமைந்தவுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையும், 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்கும் என்று அறிவித்துள்ளார். தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 27ம் தேதி வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகுதான் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளோம். அந்த அறிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்க இயலாது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாருக்கும் ஓய்வூதியம் கொடுக்கும்போது எங்களுக்கும் வழங்க வேண்டும். அரசு மீண்டும் அழைத்து பேசும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு ஏற்கவில்லை என்றால் 31ம் தேதி கூடி மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..