காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ள நிலையில்,
செவ்வாய்க்கிழமை முதல் எந்த ஊழியருக்கும் விடுப்புகளை அனுமதிக்கக் கூடாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசுப் பணிகளும், பள்ளிகளும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


அதன்படி, பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதத்தை அனைத்துத் துறை
செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பி வைத்துள்ளார்.


 அதன் விவரம்:-
அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால், அது பணிக்கு வராத நாளாகக் கருத்தில் கொள்ளப்படும்.


பணிக்கு வராத நாள்களில் ஊதியம் ஏதும் அளிக்கப்படாது. மேலும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விடுமுறை எடுத்து பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வரும் வரையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் விடுமுறை
அளிக்கக் கூடாது.

 மருத்துவ விடுப்பு கோரினால் அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே அளிக்க வேண்டும். மருத்துவ விடுப்பு கோரும் அரசு ஊழியர்களின் விண்ணப்பங்கள், சான்றுகளை தமிழக மருத்துவ வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மருத்துவ விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.


இந்தச் சான்றுகள் உரிய முறையில் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
பணிப் பட்டியலை அனுப்ப வேண்டும்:


போராட்டங்கள் முடியும் வரையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.



அதுகுறித்த வரையறுக்கப்பட்ட பட்டியலை ஒவ்வொரு நாளும் காலை 10.15 மணிக்குள் தலைமைச் செயலகத்தின் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கிராம அளவில் இருந்து தொடங்கி மாவட்டங்கள் மற்றும் மாநில அளவிலான அலுவலகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Whats App Group link