தமிழக முதல்வரின் மாவட்டமான சேலத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம்  வலுப்பெற்றுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பேருந்துகளை மறித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்தல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து போராட்டம் நடந்து வருகிறது. அதையடுத்து சேலம் மாவட்டத்தில்

மேட்டூர், ஓமலூர்,  எடப்பாடி, ஆத்தூர், தலைவாசல், வாழபாடி உட்பட 11 வட்டாரங்களில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் மாவட்ட செயலாளர் ஶ்ரீராம், ''எங்களுடைய இரண்டாண்டுக்கால கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாததால் நாங்கள் போராட்ட களத்திற்கு வந்திருக்கிறோம். கடந்த முறை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது கஜா புயல் வந்ததால் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டோம். அரசு எங்களுக்கு நல்லது செய்யும் எனக் கருதினோம். ஆனால் இதுநாள் வரை அரசு எங்க கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

எங்களை அழைத்து பேசாமல் எங்கள் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கு அரசு அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். இந்த போராட்ட களத்திற்கு 90 விழுக்காடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வந்து விட்டோம். அதனால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயல்படாமல் இருக்கிறது. அதனால் அரசு முன்வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.