'டிக் டாக்' செயலி பயன்படுத்த தடை

 'மாணவர்கள், மொபைல் போனில், 'டிக் டாக்' செயலியை பயன்படுத்தக்கூடாது' என, பள்ளிகள் தடை விதித்துள்ளன

.மொபைல் போன் மோகம், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அதிகரித்துள்ளது

.அதிலும், வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவற்றை தாண்டி, தற்போது, 'டிக் டாக், மியூசிக்கல்லீ' போன்ற வீடியோவுக்கான செயலிகள், மொபைல்போன் பயன்படுத்துவோரை அதிகம் ஈர்த்துள்ளன.

குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், 'டிக் டாக்' செயலியின் மீது, அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், பல்வேறு குடும்பங்களில் பிரச்னை ஏற்படுகிறது.

 குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் இந்த, 'டிக் டாக்'கில் வரும் பெண்களின் சுய விபரங்களை தவறாக பயன்படுத்துவதும் அம்பலமாகி உள்ளது.

இந்நிலையில், வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், 'டிக் டாக்' மோகத்தால், வகுப்பறையில் ஆசிரியரை கிண்டல் செய்து, ஆடி பாடி ரகளை செய்த, 'வீடியோ', சமீபத்தில், பெற்றோரை அதிர வைத்தது.

பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட ஆறு மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

 இதையடுத்து, வேலுார் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும், 'டிக் டாக்' செயலி மற்றும் மாணவர்களின் ஒழுக்க முறை குறித்து, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பல தனியார் பள்ளிகள், பிரார்த்தனை கூட்டங்களில், 'டிக் டாக்' போன்ற செயலியின் ஆபத்துக்களை எடுத்து கூறி, மாணவர்கள் அவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

மாணவர்கள் படிக்கும் காலங்களில், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிக் டாக், மியூசிக்கல்லீ, இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பொழுதை போக்காமல், படிப்பில்அக்கறை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.