ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் 17பி அனுப்பும் பணியை செய்யமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

 அவர்களைத் தொடர்ந்து தேர்வுத்துறை அலுவலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ஒன்றியத்தின் அவசர உயர்நிலைக் கூட்டம், சென்னையில் உள்ள மாநில ஒன்றிய கட்டிடத்தில் நேற்று நடந்தது.

 அதில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு கடுமையான வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.

 குறிப்பாக, ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, விடுமுறை நாட்களிலும் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து, இரவு பகலாக பணி வழங்குகின்றனர்.

 இதனால் பணியாளர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

 அதனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு காரணம் கேட்கும் தற்காலிக பணி நீக்க ஆணை, 17பி நோட்டீஸ் அனுப்புதல், தற்காலிக ஆசிரியர் நியமனம் போன்ற பணிகளை கல்வித்துறை பணியாளர்கள் செய்வதில்லை என்றும், கல்வித்துறையின் இதர பணிகளை மட்டுமே ெ்சய்வது என்றும் முதற்கட்டமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை பணியாளர் சங்கமும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவான முடிவுகளை அறிவித்துள்ளனர்.

இது குறித்து தேர்வுத்துறை பணியாளர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

புதிய ஓய்வு ஊதிய திட்டத்ததை கைவிட முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக செய்தி வெளியிட்டுள்ள நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்து, குழு அமைக்கப்பட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என்று அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்த தேர்வுத்துறை பணியாளர்கள் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.

 மேலும் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்,அரசுப் பணியாளர்கள் மீது அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குமுறை செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

 எனவே. இந்த நியாயமான போராட்டத்துக்கு எங்கள் வாழ்வாதார  கோரிக்கையான பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை பெறுவதற்காக நாளை(இன்று)முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என ஒருமித்தக் கருத்தோடு முடிவு எடுத்துள்ளோம்.