கடலுார் மாவட்ட கருவூலத்தில் முழு கணினி மயமாக்கல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன் பயனாக சம்பள பட்டியல் கொடுத்து காத்திருக்காமல் அதே நாளில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் துரித பணி அமலாகிறது.
கருவூலத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தினை (முழு கணினி மயமாக்கல் திட்டம்) விரிவுபடுத்தும் விதமாக கடலுார் மாவட்ட கருவூலத்தில் தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூல பணிகளை மேம்படுத்தும் பொருட்டும் பிரத்யேகமான வழிமுறைகளை கையாள உள்ளது.
இதற்காக மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அரசு 288.91 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்த மிகப்பெரிய மூன்று முன்னோடி நிறுவனங்களான அசென்ஜர் நிறுவன ஆலோசனை முகமையாகவும், விப்ரோ திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் மூன்றாம் நபர் தணிக்கை முகமையாகவும், ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இத்திட்டத்தில் மாநில கணக்காயர், தமிழ்நாடு, பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர், இந்திய ரிசர்வ் வங்கி வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வலைத்தளம், முகமை வங்கிகள் ஆகிய பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் டில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உட்பட 29 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருபவர்கள் தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் எவ்வித கால நிபந்தனையுமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும்.
மேலும் கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் எளிதாகவும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
.தற்போதுள்ள நடைமுறையின்படி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலிருந்து சுமார் 6 முதல் 10 நாட்களுக்கு பிறகே பட்டியல் தொகை பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் இந்த திட்டத்தினால் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ-குபேர் வசதியின் மூலம் தீர்வு கிடைக்கும்.இத்திட்டத்தினால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூலத்திற்கும் மாதாந்திர கணக்கின் போது நடைபெறும் சிக்கலான ஒத்திசைவுப்பணி இனி வரும் காலங்களில் தவிர்க்கப்படும்.
கணினி வழி பரிவர்த்தனை, மனிதவள பயன்பாட்டால் நிகழும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இதற்கான துவக்க விழா நேற்று கருவூலத்தில் நடந்தது.
கருவூல கணக்குத்துறை மண்டல இணை இயக்குனர் வெங்கட்ராமன் கடலுார் கருவூலத்தில் துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் கருவூல அலுவலர் மணிவண்ணன், உதவி கருவூல அலுவலர் பத்மினி பங்கேற்றனர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..