சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை திட்டமிட்டவாறு வேலை நிறுத்தத்தை தொடங்கினால் அரசு நிர்வாகமும் குழந்தைகளின் கல்வியும் முடங்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோரிக்கை
மறியல்
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை 22-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஆர்ப்பாட்டம்
போராட்டம்
அதன்படி நாளை காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமும், 23, 24-ந்தேதிகளில் தாலுகா தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் 25-ந்தேதி மாவட்ட தலை நகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும்.
உயர்மட்ட குழு கூடும்
முடிவு
தொடர்ந்து 26-ந்தேதி சென்னையில் ஜாக்டோ -ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் கருத்து
நடவடிக்கை
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறுகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் திட்டமிட்டவாறு நாளை தொடங்கினால் அரசு நிர்வாகமும், குழந்தைகளின் கல்வியும் முடங்கிப் போகும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துப் பேசி போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Dr S RAMADOSS
@drramadoss
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் திட்டமிட்டவாறு நாளை தொடங்கினால் அரசு நிர்வாகமும், குழந்தைகளின் கல்வியும் முடங்கிப் போகும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை  அழைத்துப் பேசி போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!