ஒண்ணாம் கிளாஸ் வாத்தியாருக்கு டைடல் பார்க்கில் வேலை செய்யும் பொறியாளரை விட அதிக சம்பளம் என்ற நடிகை கஸ்தூரியின் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து நெட்டிசன்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 



 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்த அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. 




இதில் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்துப் பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ''தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களை விட மும்மடங்கு சம்பளம், வேலை பளுவோ குறைவு. மாணவர்கள் வெற்றி குறித்த அழுத்தம் , பொறுப்பும் கவலையும் அதினும் குறைவு. செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை நிரந்தரம். வேறு எங்கும் இல்லாத ஓய்வூதியம், அரசு விருதுகள், பயணத் தள்ளுபடி, இலவச உணவு உள்ளிட்ட சலுகைகள், அரசு செலவில் கல்வி ஆய்வு அல்லது ஆராய்ச்சி செய்ய வெளியூர், வெளிநாடு பயணம், தேர்தல் பணிக்கு பணம், இப்படி அரசு கல்வித் துறையில் பணிசெய்வோருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. 




 ஒண்ணாம்கிளாஸ் வாத்தியாருக்கு Tidel Park இல் வேலை செய்யும் BEயை விட சம்பளம் அதிகம். சத்துணவுக்கும் சம்பளத்துக்கும் மிக அதிகமாக செலவு செய்வது தமிழகம்தான். வாங்கின காசுக்கு உண்மையா கற்றுக்கொடுத்தா அரசு பள்ளி தரம் எப்பிடி இருக்கணும்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் கஸ்தூரியின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ''கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் பிரைவேட் கனிம வள திருடர்களையும் கேள்விக் கேட்க துப்பில்லாத நீங்கள் நியாயமாக உழைத்து சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியரைக் கேள்வி கேட்பீங்க!'' என்று சிலரும் ''ஆசிரியரிடம் கற்றால்தான் டைடல் பார்க்கில் வேலை பார்க்க முடியும்'' என்று நெட்டிசன் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். 



 ''அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை தனியார் ஊழியர்களுக்கும் வழங்க கேட்பது நல்லதா? அல்லது தனியாரைப் போல் அரசு ஊழியரையும் நடத்தச் சொல்வது நல்லதா?'' என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே கஸ்தூரியின் கருத்துக்கு, நெட்டிசன்களில் சிலர் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

Whats App Group link