சென்னை: தமிழக அரசு தற்போது அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை தொடங்கியுள்ளது இது ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும் மறுபுறம் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. படித்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பெற்றோரும் சரி படிக்காத பெற்றோர்களும் சரி தங்களது குழந்தைகளாவது நல்ல கல்வியை பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
நல்ல கல்வி என்றவுடன் நம்மவர்களின் பொதுப்புத்தியில் பதிந்து போன விசயம் ஆங்கிலக் கல்வி. இதற்காக வியாபார நிறுவனங்களின் புதிய வடிவமாக திகழும் பள்ளிகளில் குழந்தைகளை, தங்களது பொருளாதார சக்திக்கும் மீறி கடன் வாங்கியோ அல்லது இருக்கின்ற நகைகள் சொத்துகளை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ சேர்த்து விடுகின்றனர். அப்படி படித்து வரும் மாணவர்களும் முறையான ஆங்கிலத்தில் பேசுகிறார்களா என்றால் அதற்கு இல்லை என்றே பரிதாபமாக பதில் வருகிறது.
இந்த நிலையை மாற்ற அரசு இப்போது 2381 அங்கன்வாடி மையங்களில் எல் கே ஜி, யு.கே.ஜி. வகுப்புகளை ஆங்கில வழியில் ஆரம்பித்து வைத்துள்ளது. இது ஏழைகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் அதோடு அரசுப் பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இப்படி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஆங்கில வழிக் கல்வி உண்மையில் மாணவர்களுக்கு பயன் தருமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நிரூபிக்கப்பட்ட உண்மை 
தாய்மொழிக் கல்வியே நல்லது
உலக அளவில் தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே நம்பிக்கை மிக்கவர்களாகவும் திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பலமுறை பல தளங்களில் நிருபிக்கப் பட்ட உண்மை. உண்மை மட்டுமல்ல, நமது கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தாய்மொழியில்தான் கல்வி கொடுக்கவேண்டும். இச்சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஏற்றுக்கொண்டு அதை 2011 -ம் ஆண்ட அரசிதழிலும் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்திய ஒரு கொள்கையை அவர் வழியில் நடப்பதாக கூறும் அரசே மீறியிருப்பதை எப்படி கூறுவது என்று தெரியவில்லை.

ஆங்கில மோகம்
ஆங்கிலம் மீதான மோகம்
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஏனெனில் ஆங்கிலம் பேசுவோர்தான் இங்கு அறிவார்ந்தவர்கள் என்ற நிலையை திட்டமிட்டே நிறுவிவிட்டார்கள். அது நம்மையும் ஆட்டுவிக்கிறது. இந்த நிலையில் தங்களது குழந்தைகளும் ஆங்கிலம் பேசவேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புகிறார்களே தவிர அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழிக் கல்வியில்தான் கற்றாக வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் ஒற்றைக்காலில் நிற்பதாக தகவல் இல்லை.

கமிஷன்களின் கூற்று
நேர் எதிர் முடிவு
உலகின் பல்வேறு கல்விக் கொள்கைகளும், கல்வியாளர்களும், நமது நாட்டில் கோத்தாரி கமிஷனும், முத்துக்குமார் கமிஷனும் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் இதற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்திருப்பது அரசின் தொலைநோக்கற்ற பார்வையை தெளிவு படுத்துகிறது. தமிழ் வழிக் கல்வியோ அல்லது ஆங்கில வழிக் கல்வியோ எதுவாயினும் சரி அதில் பயிலும் ஒரு அரசுப் பள்ளி மாணவனும் சரி தனியார் பள்ளி மாணவனும் சரி, ஏறத்தாழ 12 வருடங்கள் ஆங்கிலத்தை பயின்ற பிறகும் முழுமையாக ஒரு வாக்கியத்தை இலக்கணப் பிழையின்றி வடிவமைக்க முடிகிறதா என்ற கேள்வியை எழுப்பினால் பெரும்பாலான மாணவர்களின் பதில் இல்லையென்றே வருகிறது. இதற்கு மாணவர்கள் மட்டுமே காரணம் என்றும் கூறிவிட முடியாது. சரியாக பயிற்றுவிக்காத ஆசிரியர்களும் ஒரு காரணம்.

ஆசிரியர்கள் இல்லை
போதிய ஆசிரியர்கள் இல்லை
இந்த நிலையில் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி ஆங்கிலப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை, ஏற்கனவே இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை அங்கு அனுப்புவோம் என்று அரசு கூறுகிறது. அப்படி அனுப்பும் பட்சத்தில் அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும் அவரகளுக்கான பாடங்கள் முழு அளவில் போதிக்கப்படுமா என்ற கேள்விகள் சாதரணமாக எழுகிறது. அதோடு 48 % பள்ளிகளில் ஈராசிரியர் பள்ளிகளாக மட்டுமே இருக்கிறார்கள். ஒரே வகுப்பறையில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கும் எப்படி வகுப்பு நடத்தப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் விடையில்லை

அரவணைப்பு
அரசும் செய்யலாமா
ஒரு குழந்தை 5 வயதுவரை பெற்றோர் மற்றும் உறவினர்களின் அரவணைப்பில் இருக்கவேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தனியார்தான் வியாபாரம் என்ற நோக்கோடு பிறந்து ஒரு சில மாதமான குழந்தைகளையும் பராமரிக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கும் பள்ளிகள் நடத்துகிறார்கள் என்றால் அரசே அதே போன்று ஒரு நிலையை ஏற்படுத்தலாமா? எல்.கே.ஜி., யு.கே.ஜி மாணவர்களை கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. குறிப்பிட்ட பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் கூட குழந்தைகளை கையாளுவதில் சற்று சிரமப்படுகின்றனர்.

தனி சூழல் தேவை
நல்ல சூழல் தேவை

அதோடு இந்த பருவ மாணவர்களுக்கு வகுப்பறையில் தனி சூழல் வேண்டும். முழுமையான தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் வேண்டும், குறைந்தது 10 குழந்தைகளுக்கு ஒரு ஆயா என்ற ரீதியில் பணியாளர்கள் வேண்டும். அவர்கள் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்கின்றனரா என்று கண்காணிக்கும் அமைப்பு வேண்டும். அதற்கென பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும் இதையெல்லாம் அரசு எப்போது செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. இப்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இந்த ஆங்கில வழி முறைக்கு கட்டணம் உண்டா அல்லது இலவசக் கல்வியா என்ற சந்தேகமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் உள்ளது. இப்படி எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது இந்த கல்வி முறை. முறைப்படுத்தி நெறிப்படுத்துமா அரசு

Whats App Group link